×

தென்காசி மாவட்ட 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார் எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாக்களியுங்கள்

*கலெக்டர் சமீரன் வேண்டுகோள்

தென்காசி : சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,884 பூத்களில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. மேலும் போலீசாரும், துணை ராணுவத்தினரும் இன்று முழு கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இதனிடையே இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சமீரன், மக்கள் எவ்வித அச்சமும் இன்றி பொது மக்கள் சுதந்திரமாக வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்ற  சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5  தொகுதிகளிலும் மொத்தம் 1,884 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூத்களில் இன்று (6ம்தேதி) காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்கிறது.

 சங்கரன்கோவில் தொகுதியில் 1,22,906 ஆண்கள், 1,30,399 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் உள்ள 2,53,310 வாக்காளர்களுக்காக 365 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குரிய மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவிற்கான தயார்நிலையில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் வாசுதேவநல்லூர் தொகுதியில் 1,22,561 பெண்கள் உள்ளிட்ட மொத்தம்  2,41,109 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட 336 பூத்களுக்கும் தேவையான மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்ள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.கடையநல்லூர் தொகுதியில் இடம்பெற்ற 1,45,979 பெண்கள் உள்ளிட்ட மொத்த வாக்காளர்கள் 2,89,940 பேருக்காக அமைக்கப்பட்ட 411 பூத்களுக்கு தேவையான  மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பிவைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

 தென்காசி தொகுதியில் 1,43,298  ஆண்கள், 1,48,853 பெண்கள், 17 மற்றவர்கள் என மொத்த வாக்காளர்கள் 2,92,168 பேருக்காக 408 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குரிய மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை வருவாய்த்துறையினர் அனுப்பிவைத்தனர்.

 இதேபோல் ஆலங்குளம் தொகுதியில்1,34,144 பெண்கள் உள்ளிட்ட மொத்த வாக்காளர்கள் 2,60,429 பேர் வாக்களிக்க அமைக்கப்பட்ட 364 பூத்களுக்கு தேவையான பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் இடம்பெற்ற 6,54,985 ஆண்கள், 6,81,936 பெண்கள், மற்றவர்கள் 35 பேர்  உள்ளிட்ட மொத்த வாக்களர்கள் 13,36,956 பேருக்காக அமைக்கப்பட்டுள்ள 1884 வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை 147 வாகனங்களில் அனுப்பிவைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சமீரன் ேநரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் பணிக்காக வருவாய்த்துறையினர் 834 பேர் ஈடுபடுகின்றனர். இதே போல் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 9,044 பேர், பொது சுகாதாரத்துறையின் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த
3,768 பேர் தேர்தல் பணியில் களத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு பூத்திலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக சக்கரநாற்காலி, அதை பயன்படுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படுவதுடன் ஒவ்வொரு மையத்திலும் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள்  வாக்களிக்க சக்கரநாற்காலியை இயக்கி உதவிபுரிவார்.

ஒவ்வொரு  பூத்திலும் அனைத்துவகையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் தயார்நிலையில் இருப்பதுடன் காவல்துறையின் மூலம் முழுமையான கண்காணிப்புப்பணியில் இருந்து வருவர். மொத்தத்தில் தென்காசி மாவட்ட 5 தொகுதிகளில் உள்ள  1884 பூத்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்தது. மேலும் போலீசாரும்,  துணை ராணுவத்தினரும் வாக்குப்பதிவு நாளன்று இன்று முழு கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் மாவட்டத்தில் இடம்பெற்ற 5 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1884 பூத்களில்  வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சமீரன், எவ்வித அச்சமும் இன்றி பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரூ.1.97 கோடி பறிமுதல்

தேர்தல்  நடத்தை விதிகள் அமலானது முதல் தென்காசி மாவட்டத்தில் காவல்துறை, பறக்கும்  படை, நிலையான கண்காணிப்புக்குழுவினர் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் கள  ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் (4ம் தேதி) வரை நடந்த  வாகன சோதனையில் 58 பேர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.1,97,19,520  கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர் உரிய ஆவணங்கள் காண்பித்த 30 பேர்  ரூ.88,73,733 திரும்பப்பெற்றுக்கொண்டனர். எஞ்சிய ரூ.1,08,45,787  கருவூலத்தில் உள்ளது.

பதற்றம் நிறைந்த 143 பூத்கள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள 1,884  பூத்களுக்கும் வாக்குப்பதிவு நாளுக்கு முதல்நாள் மாலையே மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  ஒவ்வொரு பூத்தும் காவல்துறை மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுவதுடன் துணை  ராணுவப்படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில்  கண்டறியப்பட்ட 143 பதற்றமான பூத்களை கண்காணிக்க 143 நுண்பார்வையாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு மையங்களுக்கு 1,584  காவல்துறையினர், 360 துணை ராணுவ வீரர்கள், 250 ஊர்க்காவல்படை, மற்றும்  கர்நாடக மாநிலத்தில் இருந்து 250 காவல்துறையினரும் நியமிக்கப்பட்டு  கண்காணிப்புப்பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 1,016 வெப்கேமராக்கள்  பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

உடல்நிலை வெப்ப பரிசோதனை

தற்போது கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர்களின்  பாதுகாப்பு நலன் கருதி ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் வாக்காளர்களின்  எண்ணிக்கையைப் பொறுத்து முகக்கவசம் மற்றும் கையுறை, கிருமிநாசினி  மருந்துகள் உட்பட 11 வகையான பொருட்கள் கொண்ட தொகுப்பு சுகாதாரத்துறையின்  மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.அத்துடன் தன்னார்வ அமைப்பிலுள்ள  செவிலியர் பயிற்சி பெற்ற ஒருவர் மூலம் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கு  வரும் வாக்காளர்களின் உடல்நிலை வெப்பப்பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன்  பாதுகாப்பான முறையில் வாக்களிக்க அறிவுறுத்தப்படுவர்.

தொழில்நுட்பவல்லுநர் குழு

இதேபோல் 5 சட்டமன்ற  தொகுதிகளுக்கும் 147 மண்டல அலுவலர்கள் பணி மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மண்டல  அலுவலரும் 10 முதல் 15 வாக்குச்சாவடி வரை கண்காணிப்புப்பணியில் ஈடுபடுவர்.  வாக்குப்பதிவன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் பழுது  ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யும் அளவிற்கு உரிய தொழில்நுட்ப வல்லுநர்  குழுவுடன் கண்காணிப்பில் இருந்து வருவார்கள்.

விதிமீறல் தொடர்பாக 17 புகார்கள்

இதனிடையே  சங்கரன்கோவில்,  கடையநல்லூர், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் தலா 3 புகார்களும், தென்காசி  தொகுதியில் 6 புகார்களும், ஆலங்குளம் தொகுதியில் 2 புகார்களும் என மொத்தம்  17 புகார்கள் வரபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tenkasi district , Tenkasi: 1,884 booths have been set up in 5 constituencies in the Tenkasi district ahead of the Assembly elections.
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...