×

காடையாம்பட்டி அருகே தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடிக்கு சென்ற மண்டல அலுவலர் கார் விபத்தில் சிக்கியது-3 பேர் படுகாயம்

காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடிக்கு சென்ற மண்டல அலுவலர் கார் விபத்தில் சிக்கியது. இதில், 3 பேர் படுகாயமடைந்தனர். ஓமலூர் தொகுதியில் மொத்தம் உள்ள 426 வாக்குச்சாவடிகளுக்கு, நேற்று காலை முதலே வாக்குப்பெட்டி உள்ளிட்ட தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

இதில் ஒரு குழுவினர் ஓமலூர் தேர்தல் நடத்தும் அலுவலகத்திலிருந்து, காடையாம்பட்டி ஒன்றியம் கொங்குபட்டி ஊராட்சி நல்லூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்றனர். அங்கு வாக்கு பெட்டிகள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கான கருவிகள் இறக்கி வைக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு, வாடகை காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். வண்டியை பிரசாந்த்(30) என்பவர் ஓட்டி வந்தார். மாலை 5.30 மணியளவில் நல்லூர் என்னுமிடத்தில் வந்தபோது, திடீரென தறிகெட்டு ஓடிய கார், 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காடையாம்பட்டியைச் சேர்ந்த மண்டல அலுவலர் குமார்(55), அமரகுந்தியைச் சேர்ந்த உதவியாளர் ராமு(47), சேலம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பிரகாஷ்(29) ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். மண்டல அலுவலர் குமார் மற்றும் உதவியாளர் ராமு ஆகியோருக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ஓமலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாபிரியா, அரசு மருத்துமனைக்கு சென்று அலுவலர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kadayampatti , Kadayampatti: A zonal officer who went to the polling booth for election work near Kadayampatti was involved in a car accident. Of these, 3 were
× RELATED காடையாம்பட்டி அருகே பயங்கரம் வெடி...