×

போச்சம்பள்ளியில் வாட்டி வதைத்த வெயிலால் வெறிச்சோடிய வாரச்சந்தை-சீக்கிரமாகவே கடையை சாத்திய வியாபாரிகள்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளியில் கடும் வெயிலால் வாரச்சந்தை வெறிச்சோடியது. இதனால், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடைக்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக போச்சம்பள்ளி பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் எதிரொலியாக போச்சம்பள்ளியில் நேற்று கூடிய வாரச்சந்தை வெறிச்சோடியது. போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச்சந்தை பிரசித்தம். இங்கு தக்காளி முதல் தங்கம் வரையிலும் விற்பனை செய்யப்படும்.

கோடை துவங்கிய நிலையில் உணவு பண்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், சந்தையில் பொருட்கள் விற்பனை களை கட்டி வந்த நிலையில், நேற்றைய சந்தை வெறிச்சோடியது. நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் தகித்ததால், சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

சுட்டெரித்த வெயிலுக்கு பயந்து வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களின் வரத்தும் சரிந்தது. இதனால், சந்தை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. வெயிலை பொருட்படுத்தாமல் கடை விரித்திருந்த வியாபாரிகள், வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சந்தைக்கு கூட்டம் வராததால் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காலை 7 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால், நண்பகல் வேளையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக, சந்தையில் மக்கள் கூட்டம் குறைந்ததால் வியாபாரம் டல் அடித்தது. இதனால், சீக்கிரமாகவே வியாபாரத்தை முடித்துக் கொண்டு வியாபாரிகள் கடையை சாத்தினர்,’ என்றனர்.

Tags : Pochampally , Bochampally: The weekly market in Pochampally was deserted due to heavy sun. Thus, the merchants were shocked.
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...