×

வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதிகளில் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேகரிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேற்று வியாசர்பாடி சர்மா நகர் எஸ்.ஏ.காலனி, எருக்கஞ்சேரி, மகாகவி பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நான் எனது தொழிலிலேயே இருந்திருப்பேன். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதால்தான் உங்களை நாடி வந்துள்ளேன். பல ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருகிறேன். அதாவது, இறந்த ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை என பல்வேறு பணிகளை செய்து வருகிறேன்.

என்னை வெற்றி பெற செய்தால், இந்த தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை முற்றிலுமாக சரிசெய்வேன். மக்கள் எப்போதும் என்னை எளிதில் நேரில் சந்திக்கலாம். மேலும் உங்களுக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஒரு உதவி மையத்தை பெரம்பூரில் அமைக்க உள்ளேன். உங்கள் தேவைகளை நீங்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் போதும். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி அந்த பாதிப்புகளை சரி செய்வேன். எனவே, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின் போது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : NR Dhanabalan ,Vyasarpadi ,Erukkancherry , NR Dhanabalan collects votes in Vyasarpadi and Erukkancherry areas
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது