×

இ-கோர்ட் திட்டத்தில் அடுத்த நவீனமயம் வழக்கு விசாரணை முழு விவரம் மனுதாரர்களுக்கு கிடைக்க வசதி: 3ம் கட்ட வரைவு திட்டத்தில் பரிந்துரை

புதுடெல்லி: இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள வசதிகள் பற்றிய பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற குழு நேற்று வெளியிட்டுள்ளது. இது, தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தை கணினி மயமாக்கும் இ-கோர்ட் திட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையில் உயர்நிலை குழு (இ-கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நீதிமன்றங்களில் இ-கோர்ட் திட்டத்தின் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள், தீர்ப்புகள் பற்றிய விவரங்கள் போன்றவையும் இதில் இடம் பெறுகின்றன.

இந்த இ-கோர்ட் திட்டத்தில் 3ம் கட்டமாக செய்யப்பட வேண்டிய நவீனமயம், மக்களுக்கான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு போன்றவை குறித்து இந்த குழு ஆலோசித்து வந்தது. தற்போது, இக்குழு தனது பரிந்துரைகளை 86 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேற்று இது வெளியிடப்பட்டுள்ளது. இ-கமிட்டியின் இணைய தளத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பாக தங்களின் ஆலோசனைகள், கருத்துக்களை வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வழங்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இ-கமிட்டியின் 3ம் கட்ட பரிந்துரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* இந்திய நீதித்துறையின் தகவல், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துகான தேசிய கொள்கை - 2005 அடிப்படையில் இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
* சுதந்திர இந்தியாவில் பொதுமக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதற்கான மற்றும் செலவுகள் அதிகம் இல்லாத அணுகலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம்.
* டிஜிட்டல் வழக்கு பதிவேடு, குற்றவியல் நீதி சட்ட விதிமுறைகள் போன்ற முக்கிய சேவைகள் உள்ளிட்டவை இதில் வழங்கப்படும்.
* மின்னணு தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகள் நேரடியாக, வெளிப்படையாக விசாரிக்கப்படும்.
* வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.
* மின்னணு விசாரணைகள் மூலமாக வழக்கறிஞர்கள், வழக்குதாரர்களின் பயண செலவுகள் குறைக்கப்படும்.
* வழக்கு விசாரணையின் முழு விவரமும் மனுதாரர்கள், வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும்.

Tags : Full details of the next modernization trial in the e-Court scheme Facility available to petitioners: Recommendation in Phase 3
× RELATED ராமர் கோயிலை மூடுவதை தடுக்கவே 400 எம்.பி.க்கள் வேணும்: மோடி பிரசாரம்