×

தேர்தல் அறிக்கையில் கூறியபடி 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எங்கே? குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அதிமுக இரட்டை வேடம்: காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா

* நீட் தேர்வால் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட அவலம்

தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கை: வேலையில்லா திண்டாட்டம் தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் 49.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியான 23.5 சதவிகித்தை விட 2 மடங்கு அதிகமாகும். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரிலிருந்து வேலையின்மை 10 மடங்காக உயர்ந்துள்ளது. இளைஞர்களின் எதிர்கால கனவுகள் அதிமுக ஆட்சியால் முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டது.

கடந்த 2020 ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் 66.37 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டுப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9,251 இடங்களுக்கு 20 லட்சம் மனுக்கள் குவிந்தன. தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் பட்டதாரிகளும் 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகளும் படித்து வெளியே வருகின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க அதிமுக ஆட்சியில் எந்த வாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் நீட் திணிப்பால் ஏற்பட்ட பாதிப்பு
தமிழகத்தில் மொத்தம் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இதில் கடந்த 3 ஆண்டுகளாக 13 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேருகிற வாய்ப்பை பெற்றார்கள். நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 405 மாணவர்கள் சேருகிற வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 400 மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 405 பேருக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது. மீதி இடங்கள் சிபிஎஸ்சி, மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டங்களில் தனியார் பள்ளியில் படித்தவர்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது.  இதையும் தட்டிப்பறிப்பதற்கு மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் தேர்வில்  வெற்றி பெற முடியாமல் தாழ்த்தப்படட் சமூகத்தை சேர்ந்த அனிதா உள்ளிட்ட 16  மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட அவலம் நடந்தது. இதற்கு பாஜக-அதிமுக கூட்டணி தான் பொறுப்பாகும்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அதிமுகவின் இரட்டை வேடம்
சிறுபான்மை இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்காகவே மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட  குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்தவர்களில் 10 அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களும், பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாசும் அடங்குவார்கள்.  குடியுரிமை சட்டத் திருத்தத்தை அதிமுக எதிர்த்திருந்தால், அந்த மசோதா பாஜகவால் நிறைவேற்றியிருக்க முடியாது. இன்றைக்குக் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேறியிருக்கிறது என்று சொன்னால் அதற்கு அதிமுகவும் பாமகவும் தான் காரணம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க அழுத்தம் கொடுப்போம் என்று இப்போது அதிமுக சொல்வது சந்தர்ப்பவாத அரசியலையே வெளிப்படுத்துகிறது.

மத்திய அரசின் பொருளாதார அவலநிலை
வரலாறு காணாத வகையில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.5 சதவிகிதத்தை விட 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.  கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, அதாவது, பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்தியாவைப் பொருளாதார அழிவை நோக்கி பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொது முடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல. சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட பேரழிவு தாக்குதல்கள்.

 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு
கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410க்கு விற்கப்பட்டது. ஆனால், அதன் விலை இன்றைக்கு ரூ.875 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு ரூ. 465 உயர்த்தப்பட்டதால் ஒவ்வொரு குடும்பத்தினரும் கூடுதலாக ரூ.5,580 செலுத்த வேண்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து பாஜ ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பொருளாதார சீரழிவு காரணமாகப் படுபாதாளத்தை நோக்கி மக்களின் வாழ்க்கைத் தரம் போய் கொண்டிருக்கிறது. இதை எல்லாம் தடுத்து நிறுத்துவதற்குத் திறன் இல்லாத பாஜ அரசு, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

 தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்பு
தமிழகத்தில் 23 லட்சத்து 60 ஆயிரம் சிறு,குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 241 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1980 முதல் 1990 வரை இந்த நிறுவனங்கள் செழித்தோங்கின. ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழாகிவிட்டது. அந்த நிறுவனங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரத் தமிழக அரசு தவறிவிட்டது. 2017-18ல் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி பாதிப்பினால் ஏறக்குறைய 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தமிழகத்தில் மூடப்பட்டன.  இதனால் 5 லட்சம் பணியாளர்கள் வேலையிழந்தனர். குறிப்பாக, திருப்பூரில் உள்ள ஜவுளித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. ரூபாய் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி இழப்பு ஏற்பட்டது.

 புதிய கல்விக் கொள்கை திணிப்பு
தமிழகத்தின் மீது புதிய கல்விக் கொள்கையைப் புகுத்தி இந்தி திணிப்பை பாஜ அரசு செய்கிறது. தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கிற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருக்கிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 12 ஆயிரம் எழுத்தர் பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம்  அதற்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தியது.  இதிலிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், பாஜகவின் பிடியிலிருக்கும் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அப்படி அகற்றுவதன் மூலமே தமிழர்களின் தனித்தன்மை காப்பாற்றப்படும்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிப்பு
இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.83 கோடியை பாஜக அரசு செலவழித்திருக்கிறது. செம்மொழி தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.29 கோடி மட்டும் தான். அதேசமயம்,   இதை ஒப்பிடும் போது சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் மீது எத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய பாஜ அரசு நடந்து வருகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

அதிமுக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்
அதிமுகவின் பெரும்பாலான அமைச்சர்களின் மீது ஊழல் புகார் ஆதாரப்பூர்வமாகக் கூறப்பட்டு வருகின்றன. வருமான வரித்துறை, அமலாக்கல் துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்குப் பல அமைச்சர்கள் ஆளாகியிருக்கிறார்கள். நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது உறவினருக்குக் கொடுத்த வழக்கை விசாரிக்கச்  சென்னை உயர் நீதிமன்றம் மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) ஆணையிட்டது.  கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ-அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டியதைப்போல, சட்டமன்ற தேர்தலிலும் உரிய பாடத்தை வாக்காளர்கள் புகட்ட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ-அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டியதைப்போல, சட்டமன்ற தேர்தலிலும் உரிய பாடத்தை வாக்காளர்கள் புகட்ட வேண்டும்.

தமிழகத்தின் முதல்வராக 50 ஆண்டுகால அரசியல் அனுபவமும் நிர்வாகத் திறமையும் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பது தான் உண்மையான அரசியல் மாற்றமாக இருக்க முடியும். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்றால்  தான் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழக மக்களின் உரிமைகளையும், அடையாளத்தையும் இவரால் தான் பாதுகாக்க முடியும். மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்திட, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்வீர்! தமிழகத்துக்கு விடிவு காலமே ஆட்சி மாற்றம் தான்.



Tags : AIADMK ,Congress ,Gopanna , Where are the job opportunities for 10 lakh youth as stated in the election manifesto? AIADMK's dual role in citizenship amendment: Congress media chief Gopanna
× RELATED நெல்லை மாவட்ட தலைவர் மரணத்தில் யார்...