×

தமிழகம் முழுவதும் இறுதிக்கட்ட விநியோகம் மும்முரம் அதிமுகவினர் விடியவிடிய பணப்பட்டுவாடா: கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசார்

சென்னை: தமிழகம் முழுவதும் இறுதிகட்டமாக அதிமுகவினர் வீடு வீடாக பணம் விநியோகத்தில் ஈடுபட்டனர். இதை அதிகாரிகளும் போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் பெயரளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுதினம் (6ம் தேதி) நடக்கிறது. இன்று இரவு 7மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. எல்லா கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோல்வி பயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்து அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக பணம் விநியோகிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

போடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஓட்டுக்கு ரூ.2,000 தருவதற்காக ரேஷன் கார்டுகளின் ஜெராக்ஸ் காப்பிகள் மூலம் வீடுகளில் ஓட்டுகளின் எண்ணிக்கையை அதிமுக நிர்வாகிகள் கணக்கெடுத்து வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு போடி நகரில் உள்ள 33 வார்டுகள், நகரைச் சுற்றியுள்ள மேற்கு, வடக்கு மலை கிராமங்கள் மற்றும் 15 கிராம ஊராட்சிகளில் ஒரு ஓட்டுக்கு முதல் தவணையாக ரூ.1,000 வீதம் அதிமுகவினர் விடிய, விடிய பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஆனால், இதை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. போடி சுப்புராஜ் நகரில் ஓபிஎஸ் அலுவலகத்தின் பின்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சலிவன் வீதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 6 கார்களில் பாஜ கட்சியின் ஸ்டிக்கர், கொடிகள், ஏழு பிரதிகளில் வாக்காளர் பட்டியல்கள், ஆயிரம் ரூபாய் கூப்பன், 2 ஆயிரம் ரூபாய் கூப்பன், 10 செக் புத்தகம் மற்றும் ரூ.46,076 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பொள்ளாச்சியை சேர்ந்த கருணாகரன் (35), சேகர் (38) உட்பட 11 பாஜ உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐஜேகே மாவட்ட செயலாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்: சேலம் மாவட்டம் ஆத்தூர் (தனி) தொகுதிக்கு உட்பட்ட தலைவாசல் கொட்டாம்பாடி சோதனைச்சாவடியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் மாணிக்கம் தலைமையில் வாகன சோதனை நேற்று நடந்தது. அப்போது, அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.3.90 லட்சம் பணம் இருந்தது. விசாரணையில், வீரகனூர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஐஜேகே கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் என்று தெரியவந்தது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், ரூ.3.90 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அமமுக, அதிமுகவினர் கைது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கழுகுமலை பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு 2 பேர் வீடு, வீடாக சென்று பணம் விநியோகித்தது தெரிய வந்தது. தகவலின்பேரில், பறக்கும்படையினர் சென்று அமமுக பிரமுகர்களான சேகர், தங்கராஜ் ஆகியோரை பிடித்தனர். பின்னர், 2 பேரிடம் இருந்து ரூ.48,500யை பறிமுதல் செய்தனர். இதேபோல், திருச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி குழுமணி அருகேயுள்ள திருச்செந்துறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக மற்றும் அமமுகவினரிடமிருந்து ரூ.1.15 லட்சம் ரொக்கத்தையும், வேலூர் சத்துவாச்சாரியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வ.உ.சி. நகரில் உள்ள ஒருவீட்டில் வாக்காளர் பட்டியலுடன் ரூ.54 ஆயிரத்து 70 பணத்துடன் இருந்த துரைராஜ், முருகன் ஆகிய 2 பேரையும் பிடித்தனர்.

அமைச்சர் காமராஜ் தொகுதி: திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். நேற்று எரவாஞ்சேரியில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் பணப்பட்டுவாடாவில் அதிமுகவை சேர்ந்த ஷேக், யூசுப், சுசில்ராஜன் போன்றவர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் அவர்களை விரட்டி அடித்ததன் காரணமாக பணம் பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவினர் தப்பி ஓடினர். இதுதொடர்பாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.

பவர் கட் செய்து பணம் பட்டுவாடா: இந்நிலையில், பவர் கட் செய்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட ரூ.12 கோடி நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு அதிமுகவுக்கு பலமில்லாத தொகுதிகளில் ஓட்டுக்கு ரூ.3000 வரை பணம் வினியோகிக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்றவாறு ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000, ரூ.1500 என பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றுடன் பிரசாரம் முடிவதால் பணப்பட்டுவாடா செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஏற்கனவே ஜரூராக நடந்து வருகிறது. இரவில் பிரசாரம் முடிந்த கையோடு அந்த பகுதிகளில் மின்சாரத்தை துண்டித்து பணம் வினியோகித்து வருகின்றனர். இதேபோல், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர் பட்டியலை கையில் வைத்து கொண்டு வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதற்காகத்தான் இதுபோன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கூறியதாவது: அதிமுகவினர் வெற்றி பெற முடியாது என்பதால், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாவது வெற்றி பெற நினைக்கின்றனர். நேற்று இரவு முழுவதும் அறந்தாங்கி தொகுதியில் பல கோடி ரூபாய் பணம் வீடு வீடாகச் சென்று பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பணம் பட்டுவாடா செய்வதற்காக மின்சாரத்தை நிறுத்தி வைக்க அதிமுக வேட்பாளரின் நெருங்கிய உறவினராக உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உயர் அதிகாரி ஒருவர் உதவியுள்ளார். அறந்தாங்கி தொகுதி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தவறான வழியில் சேர்த்துள்ள பணத்தை வாக்காளர்களிடம் வழங்கி, மீண்டும் ஆட்சியை பிடிக்க குறுக்கு வழியை கையாண்டு வருகின்றனர். இதற்காக அரசு இயந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். இதை தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்க்கிறது என்று குற்றம்சாட்டினர்.

* பா.ஜ. பிரமுகர் கைது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ. பிரமுகர் முருகன் (47) என்பவர், வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ரூ.10,500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கன்னியாகுமரி அதிமுக நிர்வாகி ஜெஸிம் வீட்டில் நேற்று மாலை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இவர், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Chief of Mummuram , The final phase of distribution throughout Tamil Nadu is in full swing
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...