×

40 நாட்கள் தவக்காலம் முடிந்தது ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்: நள்ளிரவு முதல் ஆலயங்களில் வழிபாடு

சென்னை: கிறிஸ்தவர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடும் ஈஸ்டர் திருநாள் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கின. ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. பாவிகளுக்காக தன்னை சிலுவையில் அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து மரணமடைவதற்கு முன் பரலோக தந்தையிடம் ஜெபம் செய்ய 40 நாட்கள் நோன்பிருந்ததை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து விரதம் இருப்பார்கள். இந்த நாட்களில் புலால் உணவு தவிர்த்து ஒரு சந்தி எனப்படும் ஒரு நேர உணவை துறந்து விரதம் இருப்பர். தவக் காலத்தின் இறுதி வாரம் மிக முக்கிய வாரமாக கருதப்படுகிறது.

ஈஸ்டர் தினத்திற்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறு வழிபாடு. அதை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை பெரிய வியாழன், புனித வெள்ளி நாட்களில் சிறப்பு ஆராதனைகளும், மன்றாட்டுக்களும் நடைபெறும். புனித வெள்ளியின் மையக் கருத்து என்னவென்றால் தீமையின் மீது கொண்ட வெற்றியை நினைவூட்டுவதாகும்.
கிறிஸ்தவ மதத்தில் இயேசுவின் மரணம் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதன்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்ததன் மூலம் அவர் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அந்த அடிப்படையில், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாள்தான் புனித வெள்ளி.

புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3ம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வான முக்கிய விழாவான ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பல ஆலயங்களில் நேற்று நள்ளிரவு திருப்பலிகள் தொடங்கின. பல ஆலயங்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு ஆராதனைகளும், திருப்பலிகளும் நடந்தன. ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தி தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வார்கள். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வார்கள். சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் நாள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு கொண்டாடப்பட்டது.



Tags : Lent ,Easter , 40 days of Lent is over Easter Celebration: Worship in temples from midnight
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி