வாக்குப்பதிவு விழிப்புணர்வுக்காக தலைவர்களின் ‘இனிப்பு’ சிலைகள்: மேற்குவங்கத்தில் நூதன பிரசாரம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு விழிப்புணர்வுக்காக தலைவர்களின் இனிப்பு சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில் முதல் இரண்டு கட்ட சட்டசபை தேர்தல் முடிவுற்ற நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. 8 கட்ட வாக்குப்பதிவு முடிந்து வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால், ஹவுராவில் உள்ள சுவீட் கடையில், பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இடதுசாரி தலைவர் சஞ்சுக்தா மோர்ச்சா ஆகிய மூன்று தலைவர்களின் ‘இனிப்பு’ சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரசாரத்தில் மேற்கண்ட தலைவர்கள் அணியும் உடை, பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இனிப்பு சிலைகள் வடிமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராமில் ஏற்பட்ட காயத்தால் சக்கர நாற்காலியில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரதமர் மோடி பாஜகவின் தாமரை சின்னத்துடன் குர்தா ஆடை அணிந்துள்ளார். இடது முன்னணி தலைவர் பிமன் போஸ், காங்கிரஸ் மாநிலத் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, ஐ.எஸ்.எப் தலைவர் அப்பாஸ் சித்திக் ஆகிய மூன்று கட்சி தலைவர்களின் தலையுடன் ஒற்றை மனிதர் இனிப்பு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இனிப்பு கடை உரிமையாளர் கேஸ்டா ஹால்தார் கூறுகையில், ‘தலைவர்களின் சிலைகள் இனிப்புகளால் ஆனவை. தேர்தல் விழிப்புணர்வுக்காகவும், மக்கள் வாக்களிப்பதற்கான உரிமையைப் பயன்படுத்துவதான செய்தியை தெரிவிக்கும் வகையில் இந்த சிலைகளை தயாரித்தோம். 6 மாதம் வரை கெடாமல் இருக்கும். யார் ஆட்சி போக வேண்டும்? யார் ஆட்சி அமைய வேண்டும்? மாநிலத்தின் நல்லாட்சியும், வளர்ச்சியும் முக்கியம் அளிக்கும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories:

>