×

22 இடங்களில் அதிரடி சோதனை சென்னையில் ரூ.10.35 கோடி பொருட்கள், வெள்ளி பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

சென்னை: சென்னையில் மயிலாப்பூர் உட்பட 22 இடங்களில் நேற்று முன்தினம் நடந்த அதிரடி சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.10.35 கோடி பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் அளிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, சென்னை முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட லஸ் சர்ச் சாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.15 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், லஸ் சிக்னல் அருகே நடந்த சோதனையில் வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற தனியார் வங்கிக்கு சொந்தமான ரூ.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மயிலாப்பூர் பகுதியில் வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த தனியார் வங்கிக்கு சொந்தமான ரூ.48 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த சோதனையில் ரூ.2.53 கோடி, ஜாம்பஜார் பகுதியில் நடத்திய சோதனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 18 லேப்டாப்கள், 8 கேமராக்கள், 67 ஐபோன்கள், 20 ஆப்பிள் கை கடிகாரங்கள் உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓட்டேரி குட்ஸ் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை நடத்தியதில், உரிய ஆவணமின்றி ரூ.1.31 கோடி இருந்தது தெரியவந்தது. தனியார் வங்கிக்கு சொந்தமான பணம் என்றாலும், உரிய ஆவணமில்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெரம்பூர் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை முழுவதும் நேற்று முன்தினம் இரவு 22 இடங்களில் நடந்த சோதனையில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு வந்த ரூ.10.35 கோடி பணம், எலக்ட்ரானிக் பொருட்கள், 90 அரிசி மூடைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட நியூ ஆவடி ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவதாஸ் தலைமையில் நடத்திய வாகன சோதனையில், பைக்கில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.76,500 பறிமுதல் செய்யப்பட்டது.
* தெலங்கானா மாநிலம் காச்சிக்குடாவில் இருந்து நேற்று எழும்பூர் ரயில்நிலையம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகப்படும்படியாக வந்த 4 பேரின் பையை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது அதில் வெள்ளி கை கடிகாரங்கள், மோதிரங்கள், வெள்ளி செயின்கள், கற்கள் பதித்த மாலை  போன்றவை 7 பைகளில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் கண்காட்சிக்கு வந்ததாக கூறியுள்ளனர். மேலும், பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்ததையடுத்து அந்த பொருட்கள் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

Tags : Chennai , 10.35 crore items seized in 22 places in Chennai, silver seized: Flying squad operation
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...