×

தேர்தல் காலத்தில் 30% மேல் விற்பனை தாண்டாமல் இருக்க ஆதார் அடிப்படையில் மது விற்கலாமா? அரசுக்கு டாஸ்மாக் சங்கம் கேள்வி

சென்னை: ஆதார், ஓட்டர் ஐடி உள்ளிட்ட தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தும் ஆதாரங்களில் ஒன்றை வாங்கி மது விற்கலாமா என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நா.பெரியசாமி அரசுக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, மதுபான விற்பனை கண்காணிக்கப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதும் அவசியமாகும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.வாக்குப் பதிவுக்கு முன்னர் 4ம் தேதி முதல் வாக்குப் பதிவு முடியும் 6ம் தேதி வரை மூன்று நாட்கள் மதுபான விற்பனையை நிறுத்தி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 3ம் தேதி மதுக்கடைகளின் மது வியாபாரம் கடந்த 2020 பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த அளவு தாண்டினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் விடுமுறைக்கு தக்கபடி மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளும் முயற்சி 2, 3 ஆகிய இரு நாட்கள் விற்பனையிலும் பிரதிபலிக்கும் என்பதை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இயல்புக்கு மாறாக மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் சூழலில் அதனை ஒழுங்கு படுத்தும் பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம். எனவே, 2 மற்றும் 3ம் தேதி எவ்வளவு மதுபானம் இருப்பு வைத்துக் கொள்ளலாம்? ஆதார் அல்லது வாக்களிக்க ஏற்கப்படும் ஆதாரங்களில் ஒன்றை பதிவு செய்து, அதன்படி கேட்கப்படும் மதுபானங்களை விற்பனை செய்வதா? இதனைக் காட்டிலும் வேறு எளிமையான வழிமுறை சாத்தியமா என்பது குறித்து பரிசீலித்து, பணியாளர்களுக்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmag Association , Is it possible to sell alcohol on an ad-hoc basis to avoid sales exceeding 30% during the election period? Tasmag Association questions the government
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...