வாக்கு சேகரிக்க ஊருக்குள் வர எதிர்ப்பு: மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் விரட்டியடிப்பு

மணப்பாறை: வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளரை ஊருக்குள் விடாமல் அப்பகுதி இளைஞர்கள் விரட்டியடித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இவர், ஏற்கனவே 2 முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தொகுதியில் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் சந்திரசேகருக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் அவர் ஓட்டு கேட்காமலேயே திரும்பி செல்கின்றார். இந்நிலையில் நேற்று காலை மருங்காபுரி ஒன்றியம் இரட்டியப்பட்டியில் சந்திரசேகர் வாக்கு சேகரிப்பதாக இருந்தது. இதற்காக அவரது பிரசார வாகனம் முன்கூட்டியே வந்தது. அப்போது கட்சியினரும் திரண்டிருந்தனர். 10 மணியளவில் சந்திரசேகர் காரில் வந்தார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து காரில் இருந்த சந்திரசேகரிடம், ‘லஞ்சமேடு கைகாட்டியில் 10வருடமாக எதுவுமே செய்யவில்லை. இப்போது ஏன் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, சந்திரசேகர் காரில் முன்சீட்டில் அமர்ந்து புறப்பட்ட போது, திடீரென பக்கவாட்டு கண்ணாடி மீது ஒரு செங்கல் வந்து விழுந்தது. இதனால், அவரது கார் அங்கிருந்து சென்றது. இதன்பின், அருகே உள்ள வி.இடையப்பட்டி கிராமத்துக்கு சென்ற போது அங்கும், 10 வருடங்கள் எம்எல்ஏவாக இருந்தும் எதுவுமே செய்யவில்லை என்று கூறி அவரிடம், அப்பகுதி இளைஞர்கள் தகராறு செய்தனர். இதையடுத்து, அங்கும் வாக்கு சேகரிக்காமல் திரும்பி சென்றார்.அதிமுக எம்எல்ஏ தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் சம்பவம் அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக வேட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி

தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் முருகன், தனது ஆதரவாளர்களுடன், கீழவடகரை ஊராட்சியில் உள்ள தெய்வேந்திரபுரம், பெருமாள்புரம், அழகர்சாமிபுரம் ஆகிய ஊர்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெருமாள்புரத்தில் வாக்கு சேகரித்தபோது பெண்கள் சூழ்ந்து, ‘‘10 வருடமாக ஆட்சியில இருக்கும் நீங்கள், இந்த ஊருக்கு நல்ல குடிநீர், சாலை, கழிவுநீர் வாறுகால், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எதுவும் செய்யவில்லை’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர். பெண்கள் கேள்வி கேட்டதால் அதிர்ச்சியடைந்த முருகன் என்ன சொல்வது என தெரியாமல் முழித்தார்.

Related Stories: