×

திருக்குறுங்குடியில் பங்குனி திருவிழா 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

களக்காடு: களக்காடு அருகே திருக்குறுங்குடியில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகியநம்பிராயர் கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 27ம்தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது, விழா நாட்களில் தினமும் நம்பிசுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5ம் நாளான நேற்று (31ம்தேதி) இரவில் தொடங்கியது. இதையொட்டி நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் கோயிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.

திருவீதி உலாவாக வந்த 5 நம்பிகளும் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மேலரதவீதில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு திருக்காட்சி அளித்தனர். அப்போது நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அதன்பின் நம்பிசுவாமிகள் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 10ம் நாளான வரும் 5ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

Tags : Panguni Festival ,Thirukurungudi ,Nambiswamys ,Siddhars , Panguni Festival in Thirukurungudi 5 Nambiswamy Ceremony to pay homage to the Siddharthas: Mass participation of devotees
× RELATED கோடைமழை காரணமாக திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் மும்முரம்