×

வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு விவகாரம் மக்களை ஏமாற்ற நாடகம்போடும் எடப்பாடி-ஓபிஎஸ் ஏமாறுவார்கள்: போடி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

போடி: ‘‘வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை ஏமாற்ற நாடகம் போடும் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் ஏப்ரல் 6ம் தேதி ஏமாறுவார்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து சமூகமும் திருப்தியடையும் வகையில் சட்டம் இயற்றுவோம்’’ என்று போடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தேனி மாவட்டம், போடியில் தேவர் சிலை முன்பு திமுக வேட்பாளர்கள் தங்கதமிழ்ச்செல்வன் (போடி), ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணகுமார் (பெரியகுளம்) ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி நேற்று காலை பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இதே போடியில்பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி ஓபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிவிட்டு போய் விட்டார். இந்த மாவட்டத்துக்கு ஓபிஎஸ் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை என பேசியுள்ளார். சில மாதம் முன்பு எப்படி இருந்தார்கள்? விடாக்கண்டன், கொடாக்கண்டனாக இருந்தார்கள், விடாக்கண்டன் ஓபிஎஸ், கொடாக்கண்டன் இபிஎஸ். இந்த மாவட்டத்தின் கொடை. நீங்கள் இங்கேயே இருங்கள். வெளியே ஏதும் வந்து விடாதீர்கள் என பழனிசாமி சொல்லி விட்டார். ஓபிஎஸ்சும் தலையை ஆட்டி விட்டு போய் விட்டார்.ஓபிஎஸ்க்கு 3 முறை முதல்வர் வாய்ப்பு கிடைத்தது.

அதைப்பயன்படுத்தி இந்த நாட்டுக்கு, தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? ஜெயலலிதாவிற்காவது உண்மையாக இருந்தாரா? தர்மயுத்தம் நடத்தினார். விசாரணை கமிஷன் வேண்டும் என்றார். ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் உட்கார்ந்தார். ஆவியுடன் பேசினார். ஜெயலலிதா சாவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்றார். விசாரணை கமிஷன் கேட்டார். துணை முதல்வர் பதவி கொடுத்தார்கள். விசாரணை கமிஷனையே ஓபிஎஸ் மறந்து விட்டார். சம்மன் அனுப்பினார்கள். ஆஜரானாரா?ஜெயலலிதா இருந்தவரை தரையைப் பார்த்து இருந்தவர், பிறகு ஜெயலலிதாவை தலை முழுகி விட்டார். ஜெயலலிதாவிற்கே துரோகம் செய்த ஓபிஎஸ்சை தேனி மாவட்டத்தினர் விரட்ட வேண்டாமா?  பல பதவிகளை வைத்திருந்த ஓபிஎஸ் இந்த மாவட்டத்திற்கு, தன் தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? தயவு செய்து சிந்தித்து பாருங்கள். தொகுதிக்குள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏராளமானோர் வேலையின்றி தவிக்கின்றனர்.

மக்களான நீங்கள் இவர்களுக்கு முடிவு கட்டும் நாள்தான் ஏப்ரல் 6 என்பதை மறக்க வேண்டாம். அதிமுகவுக்கு மக்களைப்பற்றி ஏதும் கவலையில்லை. அவர்களுக்குள் சண்டை உள்ளது. தேர்தல் வருவதாக சொன்னதும் பெரிய நாடகம் அரங்கேறியது. கடைசி கூட்டத்தொடரில் ஓபிஎஸ்சை வைத்துக் கொண்டே, உள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினர். அதை அமைதியாக ஓபிஎஸ் வேடிக்கை பார்த்து விட்டு, தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது இது தற்காலிக சட்டம்தான். நிரந்தர சட்டம் இல்லை என்கிறார்.சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றிய உள் ஒதுக்கீடு நிரந்தரம் இல்லை. தற்காலிகம் என துணை முதல்வரான ஓபிஎஸ் கூறுகிறார்.

அப்போது கைதட்டி வரவேற்றவர், இப்போது தற்காலிகம் என்கிறார். அமைச்சர் உதயகுமாரும் தற்காலிகம் என்கிறார். பாமகவின்  ராமதாஸ், ‘‘ஓபிஎஸ்சின் பேட்டியை படித்து அதிர்ச்சியடைந்தேன். முதல்வர் பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அதெல்லாம் இல்லை. வன்னியர் இடஒதுக்கீடு நிரந்தரமானது என்று முதல்வர் சொல்கிறார்’’ எனத்தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு நாடகத்தை இவர்கள் நடத்தி இருக்கிறார்கள். தொகுதி மக்களை ஏமாற்ற நினைக்கும் நீங்கள்தான் வரும் 6ம் தேதி ஏமாறப் போகிறீர்கள். விரைவில் அமைகிற ஆட்சியில் சமூக நீதியாக இட ஒதுக்கீட்டில் அனைத்து சமூகமும் திருப்தியடையும் வகையில் சட்டம் இயற்றுவோம்.பெரும்பாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என கருத்து கணிப்பு வருகிறது. இப்போது உள்ள எழுச்சியை பார்க்கிறேன். 234 தொகுதிகளையும் நாம்தான் வெல்வோம்.

ஒரு தொகுதி கூட அதிமுக வெற்றி பெறக்கூடாது என சொல்கிறேன். ஒருவர் அதிமுகவில் வெற்றி பெற்றாலும் அவர் பாஜ எம்எல்ஏவாகத்தான் இருப்பார். இதே தொகுதியில் இருந்து ஒரு எம்பி போனாரே? அவர் அதிமுக எம்பியாகவா இருக்கிறார்? லெட்டர் பேடில் கூட அதிமுக படம் இல்லை. மோடி படம்தான் உள்ளது. திமுக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. இதனை வெளியிட்ட பத்திரிகைகள் மிரட்டப்படுகின்றன. நான்கே நாட்கள்தான். உங்கள் ஆட்டம் முடியப்போகிறது. இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து, நீட்டை நுழைத்து, மதவெறியை கிளப்பி நாட்டை குட்டிச்சுவராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்த மோடி மஸ்தான் வேலை இங்கே பலிக்காது.

ஓபிஎஸ் ‘‘புத்திசாலி’’
மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘‘அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்று பழனிசாமி பேசுகிறார். ஆட்சிக்கு எதிராக  11 ஓட்டுகள் போட்டார்களா? இல்லையா? 11 பேர் டெபாசிட் வாங்கலாமா? ஓபிஎஸ் தியாகி என்கிறார்கள். அவர் தியாகி இல்லை. பெரிய புத்திசாலி. காரணம், காணாமல் போகப்போற கட்சியான அதிமுகவிற்கு பழனிசாமியே, முதல்வர் வேட்பாளராக இருக்கட்டும் என சொல்லி இருக்கிறார்’’ என்றார்.

* ‘‘உலக மகா நடிப்புடா சாமி’’
மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமருக்கு ஜீரோ கொடுத்தீர்கள். இப்போது என்ன கொடுக்கப் போகிறீர்கள்? ஜீரோதான். மேடையில் ஓபிஎஸ், ‘‘பிரதமர் மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன்’’ என்று பேசுகிறார். ஓபிஎஸ்தான் பக்கம் பக்கமாக தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என விளம்பரப்படுத்தினார். சினிமாவில்தான் ஒரு வசனம் வரும். ‘‘உலக மகா நடிப்புடா சாமி’’ என்று? இது அப்படித்தான் இருக்கிறது. இளைஞர்கள் போராடியதால்தான் ஜல்லிக்கட்டு வந்தது. ஓபிஎஸ் அவர்களே... போராடிய இளைஞர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். போராட்டத்தை தடுப்பதற்காக அடித்து, கலைத்தீர்களே? மறந்து விட்டீர்களா? எது வேண்டுமானாலும்
பேசலாமா?’’ என்றார்.

* பொள்ளாச்சி சம்பவம் பிரதமருக்கு தெரியாதா?
திண்டுக்கல் மாவட்டம், பழநி பஸ் நிலைய ரவுண்டானா முன்பு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மோடி எப்போதெல்லாம் தமிழகத்திற்கு வருகிறாரோ, தமிழக மக்கள் அவருக்கு சரியான பாடம் கற்பிக்கின்றனர். தாராபுரத்தில் பிரதமர் மோடி, பெண்களுக்கு பாதுகாப்பில்லையென்பது போல் பேசி சென்றுள்ளார். தாராபுரத்திற்கு அருகில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் பிரதமருக்கு தெரியாதா? யாரும் சொல்லவில்லையா? 250க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பொள்ளாச்சியில் ஆளுங்கட்சியின் முக்கிய தலைகளின் வாரிசுகள் கடத்திச் சென்று, பண்ணை வீட்டில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கொடுமையை சுமார் 3 ஆண்டுகளாக செய்துள்ளனர்.

இதெல்லாம் போலீசிற்கு தெரியாதா? தெரியும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய துறை காவல்துறை. அந்த காவல்துறையில் உள்ள பெண் எஸ்பிக்கே பாலியல் தொல்லை டிஜிபியால் கொடுக்கப்பட்டது. பெண் எஸ்பிக்கே பாதுகாப்பில்லாத ஆட்சியை நடத்தும் பழனிசாமியை வைத்துக் கொண்டே மோடி பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுபோல் பேசிச் சென்றுள்ளார். இதுபோல் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்சை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிக்கப்போவதாக பிரதமர் மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Edappadi ,Vanni ,MK Stalin ,Bodi , Edappadi-OPS will be fooled into pretending to deceive the people on the issue of internal reservation for the Vanni: MK Stalin's commitment in the Bodi campaign
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்