×

திமுகவினர் மீது பொய் வழக்குப்பதிவு செய்த திருச்சி போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்: மலைக்கோட்டை உதவி கமிஷனரையும் சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: திமுகவினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மலைக்கோட்டை உதவி கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர்.  திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன், திடீரென்று, தபால் ஓட்டு போடும் போலீசாருக்கு சிலர் பணம் கொடுத்திருப்பதாக கூறி போலீஸ் நிலையங்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார். இந்த சோதனைக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணம் வாங்கியதாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி கடந்த 27ம் தேதி இரவு உத்தரவிட்டார். வழக்கமாக ஒரு வழக்கை ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டால், ஏற்கனவே விசாரணை நடத்திய போலீசார், தங்களுடைய விசாரணையை உடனடியாக நிறுத்தி விடுவார்கள். புதிதாக விசாரணை நடத்தும் பிரிவிடம் வழக்கை ஒப்படைப்பார்கள்.

ஆனால், கடந்த 27ம் தேதி இரவு வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்ட பிறகு திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன், தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்ட தகவல்கள் வெளியானது. அவரே, இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை அழைத்து, திமுகவுக்கு எதிராகவும், திருச்சி விஐபிக்களுக்கு எதிராகவும் வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார். ஆனாலும் அவரை தன்னுடைய காரிலேயே அழைத்துக் கொண்டு, சப்-கலெக்டர் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கும்படி மிரட்டி வற்புறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் வாக்குமூலம் அளிக்க அங்கும் மறுத்து விட்டார்.

ஆனாலும், அவருக்கு தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து போனில் உத்தரவுகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், பதட்டத்தில் இருந்த போலீஸ் கமிஷனர் லோகநாதன், 2 போலீசாரை விசாரணைக்கு வரும்படி தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். அங்கு வைத்து அவர்களை மிரட்டி திருச்சியில் உள்ள விஐபிக்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அவர்களும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பதாகவும் மிரட்டியுள்ளார் கமிஷனர் லோகநாதன்.

இதனால் பயந்துபோன 2 போலீசாரும், திருச்சியில் உள்ள விஐபிக்கள் யாரையும் நாங்கள் பார்க்கவில்லை. அவர்களிடம் எப்படி நாங்கள் பணம் வாங்கியிருப்போம் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்களும் எப்படி வந்து எங்களிடம் பணம் ெகாடுப்பார்கள். இதை யாராவது சொன்னால் நம்புவார்களா என்றும் கேட்டுள்ளனர். இதனால், தொடர்ந்து அவர்களை மிரட்டி கட்சியினர் யார் மீதாவது புகார் சொன்னால் போதும் என்று கூறி சில குறிப்பிட்ட பெயரை சொல்லும்படி கேட்டு வாக்குமூலம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2 போலீசாரை கைது செய்து ஜாமீனில் விடும்படி கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டதாகவும், அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு வழக்கை சிபிசிஐடி வசம் கொடுக்காமல், ஒரு நாள் முழுவதும் போலீஸ் கமிஷனரே விசாரணை நடத்தியது திருச்சி போலீசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போலீசாரிடம் பணம் பறிமுதல் செய்தால், அந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை நடத்த உத்தரவிடுவதுதான் முறையானது. போலீசார் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் கணக்கில் வராத பணம் வைத்திருந்தால் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்குத்தான் உத்தரவிட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டதும், முன்னதாக கமிஷனரே முன் வந்து தன்னிச்சையாக விசாரணை நடத்தி, வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் முன்னதாக ஆதாரங்களை திரட்ட முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையில், திருச்சியில் தேர்தலை நிறுத்துவதற்காக சதி திட்டம் நடப்பதாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தும்படி தேர்தல் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், கமிஷனர் லோகநாதன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து லோகநாதனை அதிரடியாக மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது. அவரை தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கும்படி தேர்தல் ஆணையம் தமிழக அரசை கேட்டுக் கொண்டது. அதேபோல மலைக்கோட்டை பகுதி உதவி கமிஷனர் தமிழ்மாறனை சஸ்பெண்ட் செய்தும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் சில போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Electoral Commission , Trichy police commissioner who filed false case against DMK changed action: Election Commission suspends Malaikottai assistant commissioner
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு