×

சொன்னாரே..! செஞ்சாரா? தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றிய எம்எல்ஏ: வால்பாறை தொகுதி எம்எல்ஏ கஸ்தூரி வாசு

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று வால்பாறை தொகுதி. இது, மலையும் சமவெளி பகுதியும் உள்ள தொகுதியாக உள்ளது. வால்பாறை தாலூகா மேற்கு தொடர்ச்சி மலையில், 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சிறிதும், பெரிதுமாக 54 தேயிலை எஸ்டேட்களை கொண்டிருக்கிறது இத்தொகுதி.  இத்தொகுதியில், தேயிலை தோட்ட தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு வசிப்பவர்களில், 90 சதவீதம் பேர் தோட்டத் தொழிலாளர்கள்தான். வால்பாறை தோட்ட தொழிலாளர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தம் முக்கிய பிரச்னையாக உள்ளது. வால்பாறை பகுதி மக்களின் சமீபகால மிகப்பெரிய அச்சுறுத்தல் வனவிலங்குகள்.

ஆனால், இத்தொகுதி எம்எல்ஏ கஸ்தூரிவாசு இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரம் மற்றும் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு என்ற இரு விஷயத்திலும் இவர் தொகுதி மக்களை ஏமாற்றிவிட்டார் என்ற பேச்சு, தொகுதி முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. ஆனைமலை பகுதியில் அரசு தொழில்பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும். ஆனைமலை வட்டார விவசாயிகள் பயனடையும் வகையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும். ஆனைமலையை தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும். ஆனைமலை பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு, அதையும் நடைமுறைப்படுத்தவில்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றார் இத்தொகுதி எம்எல்ஏ. ஆனால், இதுவும் நிறைவேற்றப்படவில்லை. தினக்கூலி தொழிலாளர்களுக்கு தொழில்வரி ரத்து செய்வதாக கூறினார். இதுவும் காற்றில் பறந்துவிட்டது. தொழில்வரி பிடித்தம் செய்வதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் பிரச்சனைக்காக சோலையார் அணை, பெரியார் நகர் மற்றும் செட்டில்மென்ட் பகுதிகளில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

வால்பாறை அரசு மருத்துவமனை வசதிகளின்றி உள்ளது. தரம் உயர்தப்படும் என்றும், ரத்த வங்கி துவக்கப்படும் என்றும் அறிவித்துவிட்டு, இதுவரை செய்யவில்லை. மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லை. அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்கள், பொள்ளாச்சி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலா பூங்கா மற்றும் படகு இல்லம் பணிகள் கடைசி நேரத்தில் துவங்கியுள்ளது. இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டு விட்டதால், இத்தொகுதி முழுவதும் அதிமுகவுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுகிறது.


Tags : MLA ,Valparai , MLA who cheated plantation workers: Valparai constituency MLA Kasturi Vasu
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...