ரெப்கோ வங்கி மூலம் அதிமுக-வினர் பணப்பட்டுவாடா!: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் வங்கி முன்னாள் இயக்குநர் மனு..!!

சென்னை: ரெப்கோ வங்கி மூலமாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுத்து நிறுத்த கோரி அந்த வங்கியின் முன்னாள் இயக்குநர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்திருக்கிறார். தமிழகத்தில் ரெப்கோ வங்கி மூலமாக அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் அந்த வங்கியின் முன்னாள் இயக்குனர் லிங்கம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பர்மா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட ரெப்கோ வங்கி, தற்போது அதிமுகவின் கட்சி வங்கியாக மாறி இருப்பதாக தெரிவித்தார்.

ரெப்கோ வங்கியின் தலைவராக உள்ள செந்தில்குமார் முதலமைச்சரின் தனி செயலாளராக இருப்பதாகவும், அதன் மேலாண் இயக்குனர் இஸபெல்லாவும் அதிமுகவை சார்ந்தவர் என்பதால் முறைகேடுகள் நடப்பதாக லிங்கம் குற்றம்சாட்டினார். இதனால் தேர்தல் முடியும் வரை காசோலை மூலமாகவே பணப்பரிமாற்றம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என லிங்கம் வலியுறுத்தியிருக்கிறார். ஏற்கனவே ரெப்கோ வங்கியின் வீட்டுக்கடன் இயக்குனர் அதிமுகவினர் மீது புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அதன் முன்னாள் இயக்குனரும் புகார் மனு அளித்திருக்கிறார். தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ரெப்கோ வங்கி மூலமாக பணப்பட்டுவாடா செய்வது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: