×

உளுந்தூர்பேட்டையில் வாக்குசேகரிக்க வந்த அதிமுக வேட்பாளரை பொதுமக்கள் முற்றுகை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் குமரகுருவை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்டது செங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் அய்யனார் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களில் கடந்த 10 ஆண்டு காலமாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்காததாலும், சாலை பணிகள் மேற்கொள்ளாததாலும் தெருக்களில் கழிவுநீர் தேங்கி வருவதாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 10 ஆண்டு காலமாக பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் கடந்த 10 ஆண்டு காலமாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்காததால் வீடுகளின் முன் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருவதாலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பலமுறை இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இருக்கும்போதும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை இந்த கிராமத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுரு பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அய்யனார் கோவில் அருகே சென்ற போது அங்கு திரண்டிருந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டு காலமாக தொற்று நோய் ஏற்படும் சூழலில் இங்கு வசித்து வருவதாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags : Inunturpate , AIADMK, Ulundurpet
× RELATED உளுந்தூர்பேட்டையில் ரூ.10 லட்சம்...