×

கொரோனா 2வது அலை மிகவும் ஆபத்து.. இந்தியாவில் ஒரு நாளைக்கு 1,50,000 முதல் 2,00,000 பாதிப்பு வரலாம் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

சென்னை : கொரோனா இரண்டாவது அலை ஆபத்தானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறைந்து வந்த கொரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொது மக்களிடம் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. முகக்கவசம், சரீர விலகல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் பொது மக்கள் கண்டிப்பாக அவைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள், 144 தடை உத்தரவு உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், நிலைமைக்கு ஏற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம். ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே எந்த நடவடிக்கையும் தடை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதனைத்தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை ஆபத்தானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் விரைவில் ஒரு நாளைக்கு 1,50,000 முதல் 2,00,000 கொரோனா பாதிப்புகள் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். 1918ம் ஆண்டில் ஏற்பட்ட தொற்றுநோயாக இருந்தாலும் அல்லது பிரேசிலில் சமீபத்திய 2வது அலையாக இருந்தாலும் சரி. இரண்டாவது அலைகள் எப்போதும் சரீர விலகலை புறக்கணிப்பதால் மிகவும் ஆபத்தானவை” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Corona 2nd wave ,India ,Tamil Nadu ,Weatherman , Corona, Tamil Nadu Weatherman, Warning
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...