×

மகளிர் சங்க பால் உற்பத்தியாளர்களின் மாட்டு தொழுவத்தை இடித்து தள்ளிய பி.ஜி.எம்.எல்

தங்கவயல்: தங்கவயல் ஹென்றிஸ் பகுதியில் உள்ள மகளிர் சங்க பால் உற்பத்தியாளர்களின் மாட்டு தொழுவங்களை தங்க சுரங்க நிறுவன பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளியதால், கறவை மாடுகளை நம்பி வாழும் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்க சுரங்க தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில், சுரங்க பணிக்காக தமிழகத்தின் கிராமபுறங்களில் இருந்து தங்கவயல் வந்த தொழிலாளர்கள், சுரங்க வேலை முடித்த பிறகு பகுதி நேர பணியாக ஆடு, மாடு என கால்நடைகளை வளர்த்தனர். மாரிகுப்பம் மற்றும் ஹென்றிஸ் போன்ற தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளை அடுத்து நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேய்ச்சல் நிலங்கள் இருந்ததால் இந்த பகுதி தொழிலாளர் குடும்பங்களிடையே கால்நடை வளர்ப்பு அதிக அளவில் உள்ளது. அப்போது தங்க சுரங்க நிறுவனம் கால்நடைகளை வளர்க்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்காக, தொழிலாளர் குடியிருப்பு பகுதி தோறும், இரவு நேரங்களில் மாடுகளை அடைத்து வைக்க மாட்டு கொட்டகைகளை அமைத்து தந்தது.

2001 ஆம் ஆண்டு தங்க சுரங்கம் மூடப்பட்டதும், வேலை இழந்த தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளை தேடி வெளியூர்களுக்கு சென்றனர். மாரிகுப்பம், ஹென்றிஸ் பகுதிகளில் பகுதி நேரமாக கால்நடைகளை வளர்த்து வந்த தொழிலாளர் குடும்பங்கள், முழு நேரமாக கால் நடை வளர்ப்பு பணியில் ஈடுபட்டு , பால் கறந்து விற்பனை செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி சென்றனர். மேலும் அரசின் நந்தினி பால் டெய்ரி மூலம் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அரசு கால் நடை வளர்ப்பு தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தி உதவ வேண்டும் என்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தங்க சுரங்கம் மூடப்படும் வரை தொழிலாளர் குடியிருப்புகளின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பராமரித்து வந்த சுரங்க நிறுவனம் முற்றிலுமாக தான் செய்து வந்த குடிநீர், துப்புரவு, சுகாதாரம் போன்ற அனைத்து பராமரிப்பு பணிகளையும் நிறுத்தி கொண்டது.

இதனால் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த மாட்டு கொட்டகைகளும் பராமரிப்பு இன்றி பாழடைந்தது. இதனால் மாடுகளை வளர்த்து வந்த தொழிலாளர் குடும்பங்கள் தங்கள் மாடுகளை தங்கள் வீடுகளின் அருகிலேயே கட்டி வைத்தனர். இதனால் கால் நடைகளை பராமரித்து, துப்புரவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால்,  எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹென்றிஸ் இரண்டாவது லைன்  அடுத்திருந்த காலி நிலங்களில் சுமார் பத்து  மாட்டு தொழுவத்தை அமைத்தனர். அப்போது வந்து பார்வையிட்ட தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரி , தங்க சுரங்க நிறுவனத்திற்கு தேவைப்படும் போது இந்த கொட்டகைகளை காலி செய்து விட வேண்டும்’ என்ற நிபந்தனையோடு அனுமதித்தாராம்.

சில வருடங்களுக்கு முன்பு வெளியூர்களில் இருந்து நள்ளிரவில் வாகனங்களோடு வந்த மர்ம நபர்கள் தொடர்ந்து மாடுகளை திருடி சென்றதால், போலீசார் இரவு நேரங்களில் மாடுகளை பாதுகாப்பாக கட்டி வைக்கவும், கொட்டகைகளுக்கு இரும்பு கேட் அமைக்கவும் மாடு வளர்ப்பவர்களை வலியுறுத்தினார்களாம். அதன் பிறகு இந்த கொட்டகைகளுக்கு இரும்பு கேட் களை அமைத்துள்ளனர். இந்த நிலையில் தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரி தலைமையில் முன் அறிவிப்பு எதுவுமின்றி  திடீரென்று வந்த செக்யூரிட்டிகள் கல்பலகைகளால் கட்டப்பட்ட கொட்டகைகளை சம்மட்டி கொண்டு அடித்து உடைத்துள்ளனர். கூரை சீட்டுகளையும் அகற்றியுள்ளனர்.

சேதப்படுத்துவது நியாயமா?
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மகளிர் பால் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவி ஜெயந்தி கூறும் போது,``ஹென்றிஸ் பகுதியில் சுமார் ஐநூறு மாடுகள் உள்ளன. இதை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்த வித வசதிகளும் இன்றி சுய தொழிலாக செய்து வருகிறோம். தங்க வயலில் எந்த ஒரு வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில் அரசே எங்களை ஊக்கப்படுத்த வேண்டிய நிலையில் ஒதுக்குப்புறமான காலி இடத்தில்  மாடுகளுக்கு அமைத்த தொழுவத்தை அடித்து உடைத்து சேதப்படுத்துவது நியாயமா?’’ என்றார்.

எம்எல்ஏவிடம் முறையீடு
பால் வியாபாரி பாபு கூறும் போது சுரங்க பாதுகாப்பு அதிகாரி மாட்டு கொட்டகைகளை அகற்றியே தீருவேன் என்கிறார். பெண்கள் தங்கள் சொந்த காலில் நின்று சுய தொழில் செய்து தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்று வலியுறுத்தி அரசு கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி வழங்கி வரும் தொகுதி எம்எல்ஏ ரூபகலா சசிதரிடம் இது குறித்து முறையிட்டுள்ளோம்.சுரங்க பாதுகாப்பு அதிகாரியிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்’’ என்றார்.

Tags : PGML , PGML demolishes cowshed of women's union milk producers
× RELATED பிஜிஎம்எல் தொழிலாளர்கள் குடியிருப்பு...