மதுரவாயலில் துணிகரம்: 2 வீடுகளில் 24 சவரன் 2 லட்சம் கொள்ளை

பூந்தமல்லி: மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 19வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (60). இவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருக்கடையூர் கோயிலுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு  திறந்துகிடந்ததை கண்டு பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து சுமார் 9 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 15 வது தெருவில் வசித்து வரும் ரத்தன் ராஜ் (45), கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ரத்தன் ராஜிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், நடத்தி விசாரணையில்  வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 48 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது  தெரியவந்தது. மதுரவாயலில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

>