×

ஆக்சிஜன் பற்றாக்குறை நோயாளிகளுக்காக உத்தரபிரதேசத்தை கலக்கும் ‘சிலிண்டர் கேர்ள்’: தந்தைக்கு ஏற்பட்ட நிலைமையை உணர்ந்து உதவி

ஷாஜகான்பூர்: ஆக்சிஜன் பற்றாக்குறை நோயாளிகளுக்கு உதவி செய்து வரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண்ணை ‘சிலிண்டர் கேர்ள்’ என்று அப்பகுதியினர் அழைக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஷி (26), தனது ஸ்கூட்டியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டிற்கு கொண்டு சென்று உதவி செய்கிறார். இவரை இப்பகுதிமக்கள் ‘சிலிண்டர் கேர்ள்’ என்று அழைக்கின்றனர். முன்னதாக, அர்ஷியின் தந்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால், அவருக்கு ஆக்சிஜனை ஏற்பாடு செய்யுமாறு அர்ஷியிடம் மருத்துவர் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு ஆர்ஷி சுகாதார துறை அதிகாரிகளிடம் உதவி கேட்டார். அவர்கள் தங்களால் ஏதும் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டனர். ஆக்சிஜனுக்காக பல இடங்களில் தேடி அலைந்தும், தனது தந்தைக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. அதையடுத்து நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு சென்று, தனது சூழ்நிலையை அர்ஷி கூறியுள்ளார். அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவர், தான் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் ஆக்சிஜன் இருக்கும் இடத்தை கேட்டறிந்து சொல்வதாக தெரிவித்தார். அதன்படி, உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்வதாகவும், அவர் மூலம் தந்தைக்கு ஆக்சிஜனை பெற்றுவர முடியும் என்று முடிவெடுத்தார். அதன்படி, உத்தரகாண்ட் சமூக சேவகர் மூலம், ஆக்சிஜன் சிலிண்டர்களை தருவித்து, தனது தந்தையின் உயிரை காப்பாற்றினார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெறுவதில் உள்ள சிக்கல்களை நன்றாக அறிந்த அர்ஷி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி, மேற்கண்ட வாட்ஸ்அப் குழுவில் இணைந்து, பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தருகிறார். மேலும், ஆக்சிஜன் உதவிக்காக எவரிடமும் பணம் வாங்குவதில்லை. இலவசமாக சேவை செய்து வருகிறார். இதுவரை, சுமார் 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நோயாளிகளுக்கு பெற்று தந்துள்ளார். மேலும் அவரது இரண்டு சகோதரர்களும் அவரது வாட்ஸ்அப் குழுவுடன் இணைந்து சேவை செய்கின்றனர். இதுதவிர, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வருகிறது….

The post ஆக்சிஜன் பற்றாக்குறை நோயாளிகளுக்காக உத்தரபிரதேசத்தை கலக்கும் ‘சிலிண்டர் கேர்ள்’: தந்தைக்கு ஏற்பட்ட நிலைமையை உணர்ந்து உதவி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Shahjahanpur ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில்...