×

முத்துப்பேட்டை அருகே தினமும் குடிநீர் வழங்க கோரி மேலதொண்டியக்காடு கிராமத்தில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு ஊராட்சி மேலக்காடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் எல்லையில் ஒரு டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர். இதில், பத்து நாட்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரை தினசரி குடிநீர் வழங்க வேண்டும். கிராம மக்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் மணல் தடுப்பு அணையை நிரந்தர கான்கிரீட் தடுப்பு அணையாக மாற்றி தரவேண்டும்.
தொண்டியக்காடு - இடும்பாவனம் செல்லும் சாலை பத்து ஆண்டுகளாக சேதம் அடைத்துள்ளது. அதை தார்ச்சாலையாக சரி செய்து தரவேண்டும். இப்பகுதியில் உள்ள பகுதி நேர அங்காடி வாடகை கட்டிடத்தில் இருப்பதை நிரந்தர கட்டிடத்துடன் முழுநேர அங்காடியாக அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைளை நிறைவேற்றி தராத பட்சத்தில் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்போம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: எங்கள் கிராமம் சாலை வசதி குடிநீர்வசதி என அனைத்து அடிப்படை வசதிகளிலும் பின்தங்கிய நிலையில்தான் பல ஆண்டுகளாக உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடம், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கூறிவிட்டோம். எதற்கும் வழியில்லை. அதனால் இந்த தேர்தலை புறக்கணிக்க இருக்கிறோம். வேட்பாளர்கள் யாரும் எங்கள் பகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால் தடுத்து நிறுத்துவோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என்று எந்த வேட்பாளர் உறுதி அளித்து எழுதி தருகிறார்களோ அவர்களை வாக்கு சேகரிக்க எங்கள் பகுதிக்குள் செல்ல அனுமதிப்போம் என்றனர்.

Tags : Melathondiyakkadu ,Muthupet , Muthupet, drinking water, people, election boycott
× RELATED முத்துப்பேட்டை அருகே...