×

நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

அடுத்த முதல்வர் இவர்தான்?
அசாமில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே பாஜ இந்த முறை தேர்தலை சந்திக்கிறது. இதனால் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக நிதி அமைச்சரான ஹிமாந்த் பிஸ்வா சர்மா முதல்வராகக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் ஆருடம் கூறுகிறார்கள். காரணம் இல்லாமல் இல்லை. கல்வி, சுகாதாரம், நிதி என முக்கிய துறைகளை கையில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த அமைச்சர் சர்மா. அதேபோல் தற்போதைய தேர்தலில் சீட் கிடைக்காமல் போட்டி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தவர்களின் வீடு தேடி சென்று சமாதானம் செய்தையும் பலர் அதிசயமாக பார்த்தார்கள். இத்தனை காரணங்களும் சாதகமாக இருப்பதால் சர்மாவே முதல்வர் என்கிறார்கள்.

எப்படியாவது என்னை ஜெயிக்க வைச்சுருப்பா!
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தாவும், அவருக்கு துரோகம் செய்து பாஜவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியும் போட்டியிடுகின்றனர். எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென மம்தா, பாஜ தலைவர் ஒருவரிடம் மன்றாடிய தொலைபேசியில் உரையாடியது போன்ற ஆடியோ பதிவை பாஜ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் மம்தா பேசியதாக கூறப்படும் பாஜ துணைத்தலைவர் பிரனாய் லாலும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து சென்றவர்தான். அவரிடம் மம்தா, ‘‘மீண்டும் திரிணாமுல் கட்சிக்கு வர வேண்டும். எனக்காக நந்திகிராமில் தேர்தல் பணி செய்து, என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என கூறுவது போல் உள்ளது. இதற்கு பிரனாய் லால், ‘‘நான் அதிகாரி குடும்பத்தினருக்கு துரோகம் செய்ய மாட்டேன்’’ என மறுக்கிறார். இந்த ஆடியோவுடன் தேர்தல் ஆணையத்திடம் சென்றது பாஜ, மம்தா வாய் திறக்காமலேயே உள்ளார்.

ஓட்டு மையை அழிக்கநடக்குது தில்லுமுல்லு
கேரளாவில் 4 லட்சம் இரட்டை பதிவு மற்றும் போலி வாக்காளர்கள் இருப்பதாக குற்றம்சாட்டியிருப்பவர் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா. தற்போது இவர், கள்ள ஓட்டுகள் போட கம்யூனிஸ்ட் கட்சியினர் மையை அழிப்பதற்கான அமிலத்தை விநியோகித்து வருவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ‘‘இந்த தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு தில்லுமுல்லு செய்ய கம்யூனிஸ்ட் தீர்மானித்துள்ளது. ஒரே ெபயரில் 5 அடையாள அட்டைகள் வரை விநியோகிக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் ஆதரவு உள்ள அதிகாரிகள்தான் இந்த மோசடிக்கு உடந்தையாக இருக்கின்றனர்’’ என கூறி உள்ளார். ஆனால் பாருங்கள், சென்னித்தலாவின் தாயார் பெயரில் 2 ஓட்டு இருக்கும் விஷயம் வெளியாகி பரபரப்பாகி உள்ளது. ‘இது தொகுதி மாற்றத்தால் வந்த வினை. இது தேர்தல் ஆணையத்தின் தவறாகும், நான் பொறுப்பேற்க முடியாது’ என சென்னித்தலா கூறி உள்ளார்.

கலக்கத்தில் வேட்பாளர்கள்
புதுவையில் ஆதார் விவரங்களை பாஜ திருடிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இவ்விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையத்துக்கு சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க காலஅவகாசம் கேட்டதன் பேரில் வழக்கு விசாரணையை இம்மாதம் 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடக்குமா, நடக்காதா? என்ற கேள்வி மக்களிடமும் பரவலாக எழுந்துள்ளது. இருப்பினும் வேட்பாளர்கள் ஒருவார கால தீவிர பிரசாரத்தை முடித்துவிட்ட நிலையில் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால் தேர்தல் ரத்தானால் தங்களது செலவினங்களை பாதிக்கும் என்பதால் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். இவ்வழக்கை தொடுத்தவரை நோக்கி அரசியல் பிரபலங்களின் பார்வை தற்போது திரும்பியுள்ளது.



Tags : Nala ,New Delhi ,Kerala ,West Bengal ,Assam , Nala Page: New Delhi - Kerala - West Bengal - Assam
× RELATED வாணியம்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி