×

நாங்குநேரி, போடியில் வாக்கு சேகரிக்க சென்றபோது முதல்வர் எடப்பாடியை எதிர்த்து கருப்பு கொடி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளர்களுக்கு பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தேனி மாவட்டத்தில் துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரசாரம் செய்யாமல் திரும்பினார். அதுபோல் முதல்வர் பிரசாரத்தின் போதும் பொதுமக்கள் மண்ணை வாரி தூற்றியும், கருப்பு கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேசராஜாவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நாங்குநேரி பஸ் நிறுத்தத்தில் பிரசாரம் செய்தார். அவருக்கு கருப்பு கொடி காட்ட சென்ற சீர்மரபினர் நலச்சங்கத்தினரை, நாங்குநேரி டோல்கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள், முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி தேவர் சிலை அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி நேற்று பிரசாரம் செய்தார். பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்தின் நடுவே இருந்த ஒரு பெண், கையில் பதாகை ஏந்தி, சீர்மரபினர் சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கோஷமிட்டார். இதேபோல, வீரணன் என்ற மாற்றுத்திறனாளி கருப்புக்கொடி ஏந்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிர்ப்பு கோஷம் எழுப்பினார். இதையடுத்து இருவரையும் கைது செய்து, போலீசார் போடி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அமைச்சருக்கு எதிர்ப்பு:திருச்சியில், கிழக்கு தொகுதி வேட்பாளரான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிந்தாமணி, கரூர் பைபாஸ் சாலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நாடார் தெருவில் உள்ள 100 குடும்பத்தினர் முற்றுகையிட்டு, ‘‘எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத வெல்லமண்டி நடராஜன் பிரசாரம் செய்ய வரக்கூடாது’’ எனக்கூறினர். மேலும், அந்த தெருவில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் காட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அமைச்சர் மற்றும் கட்சியினர் அப்பகுதியில் பிரசாரம் செய்யாமல் வேறு பகுதிக்கு சென்றனர்.

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம். சிட்டிங் எம்எல்ஏவான இவர், சோழவந்தான் அருகே எம்.புதுப்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு மாணிக்கம் பிரசாரத்திற்கு சென்றார்.அப்போது மாணிக்கத்தின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ‘‘எங்கள் ஊருக்கு சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. எதற்காக இங்கு வருகிறீர்கள்?’’ எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த எதிர்ப்பால் விரக்தியடைந்து அருகில் உள்ள மன்னாடிமங்கலத்திற்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு, ‘‘எங்கள் ஊருக்கு கழிப்பறை வசதி செய்வதாக கூறினீர்களே? இதுவரை ஏன் கழிப்பறை கட்டித் தரவில்லை’’ என பெண்கள் கேள்வி எழுப்பினர். பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிய மாணிக்கம் எம்எல்ஏ அவசர அவசரமாக பிரசாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார். பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் அதிமுகவினர் கதிகலங்கி உள்ளனர்.

Tags : Nanguneri ,Chief Minister ,Edappadi , Chief Edappadi
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...