×

கொரோனா தொற்றாமல் தடுப்பது எப்படி? : ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று காலை ஆய்வு செய்த பின்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த வார பாதிப்பையும், இந்த வார பாதிப்பையும் பார்க்கும் போது வேறுபாடு தெரிகிறது. கடந்த மார்ச் 1ம் தேதி 475 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ளதனியார் பல்கலைக்கழகத்தில் 52 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. கிண்டி மத்திய பயிற்சி மையத்தில் தொற்று உறுதியானது.காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளை பார்த்த பிறகு மக்கள் மாஸ்க் அணிகின்றனர்.

எங்களை பார்த்து மாஸ்க் அணிவதற்கு நாங்கள் கொரோனா இல்லை. கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தான் மாஸ்க் அணிய வேண்டும். இந்த நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள 1.28 லட்சம் குடியிருப்புகளில் 2,431 குடியிருப்பு பகுதிகளில்தான் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதிலும் 3க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் உள்ள 103 குடியிருப்புகளில் தான் தொற்று உள்ளது. மேலும் 3ல் இருந்து குறைவாக 2,328 குடியிருப்புகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

நகர்புறங்களில் 1.28 லட்சம் தெருக்களை கணக்கெடுத்துக் கொண்டால் 1.18 லட்சம் தெருக்களில் பாதிப்பு இல்லை. 3,960 தெருக்களில் நோய் தன்மை உள்ளது. அதில் 409 இடங்கள் 3க்கும் மேற்பட்டவர்களின் பாதிப்பு உள்ளது. 3,559 இடங்களில் 3க்கும் குறைவான பாதிப்பு இருக்கிறது. ஆக மொத்தம் 512 இடங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்கு வேறு எந்த வழியும் இல்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் குறையும். ஒருகாலக்கட்டத்தில் 2 ஆயிரத்தை தாண்டுவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Radhakrishnan , How to prevent corona infection? : Interview with Radhakrishnan
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்