×

விசேஷ சீருக்கு பெயர் பெற்ற தொகுதியில் மும்முனைப்போட்டியில் முந்தப் போவது யார்?

* மீண்டும் தொகுதியை கைப்பற்றுவாரா பா.பி வேட்பாளர்
* சிட்டிங் எம்எல்ஏ மீதான அதிருப்தியால் அதிமுகவுக்கு சிக்கல்

உசிலம்பட்டி சிட்டிங் அதிமுக எம்எல்ஏ தொகுதிக்கு எதுவுமே செய்யாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது சந்தேகமான நிலையிலே உள்ளது. அதே நேரம் கூட்டணி பலத்தால் பா.பி வேட்பாளர் கதிரவனின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பழம்பெருமைக்குரியதாக உசிலம்பட்டி தொகுதி இருக்கிறது. பார்வர்டு பிளாக் கட்சிக்கென வாக்காளர்கள் கொண்டதாகவும் இத்தொகுதி இருக்கிறது. பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் மூக்கையாத்தேவர் 5 முறை இத்தொகுதியில் வென்று சட்டப்பேரவைக்கு தேர்வானார். பொதுவாக, இங்கு காது குத்து, சடங்கு, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சீர் அதிகளவு செய்வார்கள்.

பெண் எடுத்தால் உசிலம்பட்டியில் எடுக்க வேண்டுமென கூறுமளவுக்கு சீர் பெருமை உடைய தொகுதி உசிலம்பட்டி ஆகும். விவசாயமே பிரதானம்:உசிலம்பட்டி தொகுதியானது தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களின் எல்லைகள் கொண்டதாக பரந்து விரிந்திருக்கிறது. உசிலம்பட்டி நகராட்சி, எழுமலை பேரூராட்சி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களை இணைத்து இத்தொகுதி இருக்கிறது. தொகுதியில் 1,41,955 ஆண்கள், 1,41,623 பெண்கள், இதரர் 10 என மொத்தம் 2,83,588 வாக்காளர்கள் உள்ளனர். 50 சதவீதம் முக்குலத்தோர் உள்ளனர். தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. உசிலம்பட்டியில் பிஸ்கெட், மிட்டாய் தயாரிப்பும் இருந்தது.

பன்னாட்டு நிறுவனத்தாக்கம் உள்ளூர் தயாரிப்புகளை நலிவடையச் செய்துள்ளது. வேலைவாய்ப்பு தேடி வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏராளமானோர் சென்றுள்ளனர். எதுவுமே நிறைவேத்தலை... உசிலம்பட்டி தொகுதிக்குள் மகளிர் கல்லூரி, உசிலம்பட்டி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம், 4 மாவட்டங்களை இணைப்பதால் உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு அடிப்படை வசதிகள், 58 கிராம கால்வாயில் அதிகபட்ச அளவிற்கு தண்ணீர் கொண்டு வந்து கண்மாய்களை நிரப்பும் திட்டம், விவசாய விளை பொருட்களுக்கான குளிர்பதன சேமிப்பு கிடங்கு, மல்லிகை விளைச்சல் இருப்பதால் வாசனை திரவிய தொழிற்சாலை, சேடப்பட்டியில் தொழிற்பேட்டை என பல்வேறு வாக்குறுதிகளை கூறி நிறைவேற்றுவதாக சிட்டிங் அதிமுக எம்எல்ஏ நீதிபதி வாக்குறுதி அளித்தார்.

ஆனால், இது எதையுமே நிறைவேற்றாதது தொகுதிக்குள் அதிமுக மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தலைமை சீட் தர மறுப்பு : உசிலம்பட்டி தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்எல்ஏவான நீதிபதி தனது சொந்த ஊராட்சியிலேயே சாதாரண அடிப்படை வசதியைக்கூட செய்து தரவில்லையென அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தொகுதி பக்கமே பெரியதாக தலைக்காட்டுவதில்லை. இப்படி ஒரு எம்எல்ஏ இருக்கிறாரா என்ற அளவில்தான் இருந்து வந்தார். தொகுதியில்  மக்கள் மனுக்களாக கொடுத்த பிரச்னைகள், அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. இவர் மீதான அதிருப்தியில் தலைமை இம்முறை அவருக்கு சீட் தரவில்லை.

ஐயப்பனுக்கு வழங்கியதால் நீதிபதி கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் அதிமுக வேட்பாளர் ஐயப்பனுடன் ஒரு நாள் கூட பிரசாரத்திற்கு செல்லவில்லை. மேலும் இவரை அழைத்து சென்றால் நமக்குத்தான் கெட்ட பெயர் என்று  வேட்பாளரும், அதிமுக நிர்வாகிகளும் விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அமமுக பிரிக்கும்: அமமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரனால், அதிமுக வாக்குகள் அதிகமாக பிரிந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் கடந்த எம்எல்ஏ நீதிபதி கொடுத்த வாக்குறுதிகளான சேடபட்டி  ஒன்றியத்தில் டேராப்பாறை அணைத்திட்டம், சிப்காட் தொழிற்சாலை, சாப்டூர் -  சந்தையூர் இணைப்புச்சாலை, மல்லப்புரம் - மயிலாடும்பாறை இணைப்புச்சாலையை விரிவுப்படுத்தி பேருந்துகள் இயக்குவது,

செல்லம்பட்டி ஒன்றியத்தில் பூ  நறுமண தொழிற்சாலை அமைத்து கொடுப்பது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளில் இதுவரை  ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. திமுக பலத்துடன்... கடந்த முறை உசிலம்பட்டி, சேடபட்டி ஒன்றியத்தலைவர் பதவியை திமுகவே கைப்பற்றியது. எனவே, திமுகவிற்கு இத்தொகுதியில் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. அதிமுக சார்பில் புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கதிரவன், அமமுக சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மகேந்திரன் போட்டியிடுகின்றனர்.

கதிர்... ஒளி விடும்: திமுக கூட்டணி வேட்பாளரான கதிரவனுக்கு, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, ஆதித்தமிழர்பேரவை, முஸ்லீம் லீக், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச்  சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால்  உசிலம்பட்டியில் மீண்டும் கதிரவனின் வெற்றி பிரகாசமாகி உள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுடன், சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர். ஆனாலும் திமுக கூட்டணியின் பார்வர்டு பிளாக், அதிமுக, அமமுக ஆகிய மும்முனைப்போட்டியே நிலவுகிறது.

தம்பதியை தாக்கியது பின்னடைவை தரும்
உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியை சேர்ந்தவர் முருகன் (42). எலக்ட்ரீசியன். இவர் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ நீதிபதி வீட்டில், கடந்த சில வருடங்களாக எலக்ட்ரீசியன் சம்பந்தமான வேலைகளை செய்து வந்தார். நீதிபதி, இவரிடம் பணத்தை மொத்தமாக தருவது வழக்கம். ஒருமுறை ரூ.48 லட்சம் குறைவாக இருந்ததாக கூறி முருகனை மிரட்டி உள்ளார். மேலும், முருகன், அவரது மனைவியை வீட்டில் அடைத்து வைத்து விடிய, விடிய தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிமுக எம்எல்ஏ நீதிபதி புகார் அளித்தது உள்ளிட்ட விவகாரங்களால், அதிமுக தலைமை இவர் மீது கடும் கோபமடைந்தது. இதனாலேயே இம்முறை இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவை தருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Who will advance in the triangular competition in the constituency named for Special Uniform?
× RELATED எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை...