×

80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வழங்கும் பணி இன்று துவக்கம்: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்க ஏதுவாக படிவம் 12டி வழங்கப்பட்டு அவற்றில் 7,300 பேரிடமிருந்து சுயவிருப்பத்தின் பேரில் தபால் வாக்குகள் சீட்டு கோரி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டுள்ளன.  இந்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கும் பணிகள் இன்று துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. தபால் வாக்குகளை வழங்க 3,820 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் 70 வாக்குப்பதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்த குழுக்களில் வாக்குப்பதிவு அலுவலர்-1, வாக்குப்பதிவு அலுவலர்-2, நுண் பார்வையாளர், காவலர் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் இடம் பெற்றிருப்பார்கள்.

இந்த வாக்குப்பதிவு குழு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் பிரகாஷ் தலைமையில் மத்திய தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது.  பின்னர் கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: தபால் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு சம்பந்தப்பட்ட தபால் வாக்கு செலுத்த உள்ள  வாக்காளரின் முகவரிக்கு வருகை புரியும் தேதி மற்றும் நேரம் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். கைபேசி இல்லாத வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். மேற்படி வாக்குச்சாவடி அலுவலர் குழு  தினமும் செல்லும் பகுதி மற்றும் தபால் வாக்குகள் அளிக்க உள்ளவர்கள் விவரங்கள் அத்தொகுதியின் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.  

மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கூட்டம் நடத்தும் பொழுது தபால் வாக்கு அளிக்க உள்ளவர்களின் விவரங்களை வழங்குவார். வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களால் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவம் 12டில் உள்ள விவரங்களின்படி வாக்காளரின் அடையாள விவரங்களை உறுதி செய்த பின் தபால் வாக்குச்சீட்டை வழங்குவார்கள்.  ஒரு வாக்காளர் பார்வையின்மை அல்லது வேறு ஏதேனும் உடல்நல குறைபாட்டின் காரணமாக வாக்களிக்க முடியாத நிலை இருந்தால் ஒரு நபரின் உதவி பெற்று வாக்களிக்க அனுமதிக்கலாம்.


Tags : Chennai District Election Officer , Postal voting for senior citizens over 80 years of age and persons with disabilities begins today: Chennai District Election Officer
× RELATED சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை