அரூர் : அரூர் பகுதியில் பாக்கு மரங்களை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிக்களுர், சூரநத்தம், சிட்லிங் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்பயிராக விவசாயிகள் பாக்கு மரங்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சில விவசாயிகள், தென்னையில் ஊடு பயிராக பாக்கு, ஜாதிக்காய், வாழை, மிளகு தானியங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு கூடுதல் லாபம் ஈட்டி வருகின்றனர்.
இதனால், பாக்கு மரங்களின் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பாக்கு மரங்கள் 5 ஆண்டுகளில் தொடங்கி, 50 ஆண்டுகள் வரை வருமானம் தரக்கூடியது. பாக்கு ரகங்களில் மங்களா, சுபஹல்லி குட்டை, மோஹித் என பல்வேறு ரகங்கள் உள்ளதன. இப்பகுதியில் அதிகளவில் மோஹித் ரகமே பயிரிடப்படுகிறது. நடவுக்குத் தேவையான நாற்றுகளை கருமந்துறை பழப்பண்ணையிலிருந்து கொள்முதல் செய்கிறோம். ஆனாலும் அனுபவத்தின் அடிப்படையில், தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்து கொள்ள, தாய் பாக்கு மரங்களில் விதை சேகரிக்கிறோம். அதனை நாற்றங்காலில் செங்குத்தாக நட்டு வைக்கிறோம்.
அதன்மீது நேரடியாக வெயில் படாமல் இருக்க தென்னை ஓலைகளால் மூடி தினசரி தண்ணீர் தெளித்து வருகிறோம். சுமார் 2 மாதங்களில் விதைகளில் 90 சதவீதம் முளைவிட்டிருக்கும். இந்த பருவத்தில் பிடுங்கி நேரடியாக மண்ணில் புதைத்து நடவு செய்யலாம். ஆனால், நாற்றுகள் மீது மேல் நோக்கி நேரடியாக, சூரிய ஒளி படும்போது இலைகளில் கருகல் நோய் தாக்கக்கூடும். பாக்கு மரங்களுக்கு அவ்வப்போது வேப்பம் புண்ணாக்கு இட்டு வந்தால், பூச்சிகள் அதிக அளவில் தாக்குவதில்லை. வருடத்துக்கு 5 பருவத்திற்கு மேல் அறுவடை செய்ய முடியும். சராசரியாக ஏக்கருக்கு 500 கிலோ வரை மகசூல் பெற முடியும்.இவ்வாறு கூறினார்.
