×

தெற்கு டெல்லி மாநகராட்சியில் சொத்துவரியை 34 சதவீதம் உயர்த்த திடீர் திட்டம்: ஆம் ஆத்மியின் புகாருக்கு பாஜ மறுப்பு

புதுடெல்லி:  சொத்து வரியை 34 சதவீதம் உயர்த்தும் முன்மொழிவு திட்டத்தை தெற்கு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளதாக ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பாஜ கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆம் ஆத்மி எம்எல்ஏவும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பாஜ ஆளும் தெற்கு மாநகராட்சி நிர்வாகம், அவுட்டோர் விளம்பர ஒப்பந்தார்களுக்கான ஆறு மாத உரிமம் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. இந்த இழப்பை குடியிருப்பாளர்களிடம் ஈடு செய்ய முயற்சிக்கிறது. இதற்காக சொத்து வரியை 34 சதவிதம் அதிகரித்து அதற்கான மசோதவை கொண்டுவந்துள்ளது. ஆனால், கெஜ்ரிவால் அரசு சர்க்கிள் ரேட்டை 20 சதவீதம் குறைத்துள்ளது. இதுமட்டுமின்றி பாஜ ஆளும் அரசு பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயுக்கான விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. எனினும், ஆம் ஆத்மி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் எந்தவொரு வரி உயர்வையும் செய்யவில்லை. இவ்வாறு குற்றம்சாட்டினார்.

பரத்வாஜின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜ கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர், ஆம் ஆத்மி தலைவர் பரத்வாஜ் எம்சிடிக்கு எதிராக பேசுவதற்கு முன்பாக உண்மையை அவர் சரிபார்க்கவில்லை. இதனால் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அவதூறு பரப்பும் விதமாக கூறியுள்ளார். அவரது குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. தெற்கு மாநகராட்சியின் நிலைக்குழு ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தும் ஆணையரின் பரிந்துரை திட்டத்தை தள்ளுபடி செய்துவிட்டது. இவ்வாறு கூறினார்.

Tags : South Delhi Corporation ,BJP ,Aam Aadmi Party , Delhi, property tax, 34 per cent, of Aam Aadmi Party, BJP
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...