×

ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து களத்தில் இறங்கியுள்ளோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

ஓசூர்: நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கு ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து களத்தில் நிற்கிறோம் என ஓசூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது,முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி, தளி தொகுதி பாஜ வேட்பாளர் நாகேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓசூரில் நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:


அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் நாட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள். நாடு வளம் பெறவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் பாடுபடக்கூடிய தலைவர்கள். ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றாக இணைந்து, களத்தில் இறங்கி உள்ளோம். ஓசூரில் தொழில் தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கவும், புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஓசூர் பகுதிக்கு டிவிஎஸ் உள்பட 4 நிறுவனங்கள் ₹5 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்மூலம் 13 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.அதன்பிறகு 2019ம் ஆண்டு எனது தலைமையிலான அரசில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.அப்போது, 304 தொழிற்சாலைகள் தமிழகம் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஓசூரில் டாடா நிறுவனம் ₹4,700 கோடி மதிப்பில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த நிறுவனத்துடன் மேலும் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. இந்த  3 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்போது,இந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கும்போது இந்த பகுதியில் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஓசூர் மாநகரம்,பெங்களூருவுக்கு அருகாமையில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. எனவே,ஓசூர் ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ₹220 கோடியில் சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை அமையும் போது,ஓசூரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்து விடும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொண்டை கட்டியதால் அவதி
தீவிர பிரசாரத்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டை கட்டியுள்ளது. இதனால், ஓசூர் பிரசாரத்தின் போது சரளமாக பேச முடியாமல் அவர் தவித்தார். இடை விடாமல் பிரசாரம் செய்து வருவதால் தொண்டை சரியில்லை என்று குறிப்பிட்டபடியே,தனது பேச்சை தொடங்கினார்.

Tags : Chief Minister ,Edappadi Palanisamy , Like-minded, co-domain, chief, campaign
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...