×

மோடியின் பிரசாரத்தால் அதிமுக கூட்டணி பெரும் தோல்வி அடையும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நல்லது ஏதாவது செய்திருக்கிறதா?  

10 ஆண்டுகால ஆட்சியில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது மட்டுமே நல்ல விஷயம். அதை கூட ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே கொண்டுவந்தது. நீட் உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசிடம் ஏற்பட்ட தோல்வியை சமப்படுத்துவதற்காகவே இந்த ஒதுக்கீட்டை கொண்டுவந்தது. மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த நல்லதையும் அதிமுக அரசு மக்களுக்கு செய்யவில்லை.

* நான் என்ன பல்லியா ஊர்ந்து சென்று முதல்வராவதற்கு என முதல்வர் கூறியிருக்கிறாரே?

கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை உலகமே பார்த்தது. உலகமே பார்த்ததை மற்றவர்கள் பொதுமேடையில் பேசுகிறார்கள். நேற்று இப்படி நடந்துகொண்டு இப்போது துரோகம் செய்யவில்லை என்கிறீர்களே எனக் கேட்கிறார்கள். நான் துரோகம் செய்யவில்லை என்று அவர் வாயால் இதுவரை கூறவில்லை. எதையும் ரகசியமாக செய்ய முடியாது. எல்லாமே வெளிப்படையாகவே தெரிந்ததுதான். குழந்தைகள் கூட அவர் எப்படி முதல்வரானார் என தெரிந்து வைத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது அவருடைய மனசாட்சி இங்கே பேசவில்லை.

* அதிமுக மரியாதை கொடுக்கவில்லை என்ற  கூட்டணி கட்சியினரின் குற்றச்சாட்டு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

திமுக தலைமையிலான கூட்டணி உடைந்துவிடும் என்று பாஜ தலைவர் திரும்ப திரும்ப கூறினார். ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் பெற்ற கட்சிகள் எதுவும் விலகவில்லை. ஒற்றுமையாகவே இருக்கிறோம். அந்த அணியை பொருத்தமட்டில், தேமுதிக, சமக விலகிவிட்டது. அந்த அணியால் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. திமுக தலைமையால் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க முடிந்தது. ஆனால், அதிமுகவால் அது முடியவில்லை. இது தான் அவர்களது முதல் தோல்வி.  

* பாஜவை நம்பி மட்டும் தான் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறதா?

அதிமுகவை பொறுத்தவரையில் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதை விட செயல்பட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. முழுக்க முழுக்க பாஜவின் கட்டுப்பாட்டில் அந்த கட்சி இயங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு, நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல் இப்போது அதிமுக பாஜவிடம் சிக்கியிருக்கிறது என்பது தான் எதார்த்தமான உண்மை. இதை நான் காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. அதிமுக தொண்டர்கள் முதல் கொண்டு அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரை அனைவரும் இதைத்தான் சொல்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருப்பதாக அமைச்சர்களே தெரிவிக்கிறார்கள்.

* மோடி தமிழத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால் எடுபடுமா?

மோடி கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், பாஜ வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போதும் தோற்றுப்போனார்கள். மோடி எந்த அளவிற்கு தமிழகத்தில் வந்து பிரசாரம் செய்கிறாரோ அந்த அளவிற்கு அதிமுக கூட்டணி இங்கு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மற்ற மாநிலங்களில் நடந்தது இங்கே நடக்காது. மோடியின் பிரசாரம் இங்கே எதிராக போகுமே தவிர ஒருபோதும் அவருக்கு ஆதரவாக மாறாது. அனைத்து தேர்தல்களிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

* உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை எதை பிரதிபலிக்கிறது?

எதிர்காலத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்து வெளியிட்டுள்ளோம். படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது, கல்வி, மருத்துவம் அனைத்து மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும். காசு இருந்தால் தான் கல்வி என்ற நிலை மாற வேண்டும். உயர் வைத்தியம் வரை இலவசம் என்பதை வலியுறுத்தியிருக்கிறோம். இதேபோல், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், சுகாதாரம், தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் போன்றவை எங்கள் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

* பணத்தை நம்பி மட்டும் தான் அதிமுக தேர்தலை சந்திக்கிறதா?  

10 ஆண்டு காலமாக ஆட்சி செய்யும் அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற மக்களின் எண்ணங்களில் வெளிப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தபிறகு பெருமளவிலான தொகையை அதிமுகவினர் ஈட்டியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். இதில், ஒரு பகுதியை செலவு செய்து வாக்காளர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பணத்தை கொடுத்து வாக்குகளை பெறலாம் என்று ஒரு முயற்சியை எடுக்கிறார்கள். அந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.

* பிரசாரத்துக்கு செல்லும் அதிமுகவினருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?

பெரும்பாலான அமைச்சர்கள் 10 ஆண்டு காலமாக தன்னுடைய தொகுதி மக்களின் குறைகளை போக்க எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இப்போது தொகுதிக்கு வாக்கு கேட்டு செல்லும் அவர்களை மக்கள் தன்னெழுச்சியாக முற்றுகையிட்டு விரட்டி அடித்து வருகின்றனர். மக்களோடு மக்களாக இல்லை என்றால் அவர்களை நிராகரிக்கும் மனப்பான்மை தமிழக மக்களுக்கு எப்போதும் உண்டு. அது தான் இப்போது வெளிப்படுகிறது.

* திமுக-அதிமுக தேர்தல் அறிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

திமுக எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றை செய்வோம் என கூறுகிறார்கள். கலைஞர் முதல்வராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். அதேபோல் மு.க.ஸ்டாலினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கை என்பது திமுக என்ன சொல்கிறது என்பதை பார்த்துவிட்டு அதன்பிறகு ஜெராக்ஸ் எடுத்து அதையே அறிவித்துள்ளது போல் இருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடியில் கூட அதிமுக அரசு பாரபட்சத்துடன் தான் செயல்பட்டது.

Tags : AIADMK ,Modi ,Communist ,Secretary of State ,India Muttahida Qaumi Movement , Communist of India
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...