×

திருச்சி கிழக்கு தொகுதி மநீம வேட்பாளரின் நண்பரிடம் பல கோடி ரூபாய் சிக்கியது?: ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை

திருச்சி: மக்கள் நீதி மய்ய திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளரின் நண்பர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் சிக்கியதாக தெரியவருகிறது. திருச்சி கே.கே.நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் லேரோன் மொரய்ஸ். தொழிலதிபரான இவர், செக்கோ புராப்பர்டீஸ் என்ற பெயரில் புதிய வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோடு ஏர்போர்ட் அருகே மொரைஸ் சிட்டி உள்ளது. 150 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான வீடுகள் கட்டி விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் அடங்கிய குழுவினர்.

தென்றல் நகரில் உள்ள லேரோன் மொரய்ஸ். வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: மொரைஸ் சிட்டி உரிமையாளர் லேரோன் மொரய்ஸ். ஏராளமான வீடுகள் கட்டி விற்பனை செய்ததில் வருமான வரி கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்தது. அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டது. தொழிலதிபராகவும், தற்போதைய கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தியின் நண்பராகவும் லேரோன்மொரய்ஸ் உள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முதல்கட்ட பிரசாரம் துவங்கினார்.

அப்போது மதுரையில் இருந்து திருச்சிக்கு தனி ஹெலிகாப்டரில் திருச்சி மொரைஸ் சிட்டியில் வந்து இறங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு சென்றார். அந்த வகையில் கமல்ஹாசனுக்கு நெருக்கமாக இருந்து வரும் லேரோன்  வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்த உத்தரவு வந்தது. இதையடுத்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். லேரோன் மொரய்ஸ் தமிழக அமைச்சர் ஒருவரின் பினாமி என்றும் கூறப்படுகிறது. கடந்தவாரம் திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனியில் ம.நீ.ம. மாநில பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ரூ.80 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.11.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Trichy East ,Maneema , Trichy, MNM , test
× RELATED திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில்...