×

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம்

மன்னார்குடி: மறைந்த நாகை எம்பி எம்.செல்வராஜின் உடல் நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ்(67). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லியை சேர்ந்த இவர், நுரையீரல் தொற்று பாதிப்புக்காக கடந்த 2ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்றுமுன்தினம் அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் சித்தமல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பூர் எம்பி சுப்பராயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் திருவாரூர் டிஆர்ஓ சண்முகநாதன், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் செல்வராஜ் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Mannargudi ,M. Selvaraj ,Nagapattinam ,Constituency ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...