×

முன்னணி வீரர்கள் அதிரடி விளாசல் தொடரை வென்றது இந்தியா

அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 36 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ரோகித் - விராத் ஜோடி சேர்ந்து முதல் முறையாக சர்வதேச டி20ல் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 9 ஓவரில் 94 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. 30 பந்தில் அரை சதம் அடித்த ரோகித், 64 ரன் (34 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஸ்டோக்ஸ் பந்தில் கிளீன் போல்டானார்.

அடுத்து கோஹ்லியுடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். இருவரும் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜார்டன் வீசிய 12வது ஓவரில் சூரியகுமார் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி மிரட்டினார். அவர் 32 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் ராய் வசம் பிடிபட்டார். இதையடுத்து, கோஹ்லியுடன் இணைந்த ஹர்திக் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பறக்க, ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.
கோஹ்லி 36 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது. கோஹ்லி 80 ரன் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் 39 ரன்னுடன் (17 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ராய், பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் 2வது பந்திலேயே ராய் டக் அவுட்டாகி வெளியேற, இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து பட்லருடன் மாலன் இணைந்தார். அரை சதம் அடித்த இருவரும் 2வது விக்கெட்டுக்கு 129 ரன் சேர்த்தனர். பட்லர் 52 ரன் (34 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), பேர்ஸ்டோ 7, மாலன் 68 ரன் (46 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மோர்கன் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 15.3 ஓவரில் 142 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது.

12 ரன்னுக்கு 4 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் 14 ரன், ஆர்ச்சர் 1, ஜார்டன் 11 ரன்னில் வெளியேறினர். இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து மண்ணைக் கவ்வியது. சாம் கரன் (14 ரன்), ரஷித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் தாகூர் 3 (4-0-45-3), புவனேஷ்வர் 2 விக்கெட் (4-0-15-2), ஹர்திக், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி புனேவில் 23ம் தேதி நடக்கிறது.

Tags : India ,Series , Leading Players Action Address India won the series
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...