×

தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கு வராதவர்களிடம் விளக்க கடிதம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

காஞ்சிபுரம்: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஊழியர்களிடம் விளக்கக் கடிதம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் 9 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சி வகுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வட்டாரங்களில் நடந்தது. அதில் வாக்குச்சாவடிகளில் எப்படி பணியாற்ற வேண்டும், கையெழுத்து வாங்குவது,மை வைப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களால் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபோல், பயிற்சியில் கலந்துகொள்ளாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்க கடிதம் கேட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Explanatory letter to those who do not attend election training classes: District administration action
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...