×

வருகிற சட்டசபை தேர்தலின் முக்கிய கருப்பொருள், தமிழ்நாட்டை தமிழகம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? என்பதே : கே.எஸ்.அழகிரி தடாலடி!!

சென்னை : தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக நிற்கவில்லை 234 தொகுதிகளிலும் பாஜக தான் நிற்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், நாளை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளேன். தமிழகத்தில் விரைவில் ஒரே மேடையில் ராகுல் காந்தி, ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.  இத்தேர்தலில் முக்கிய கருப்பொருள் என்னவென்றால் தமிழ்நாட்டை தமிழகம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா என்பதே . மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றால், தமிழகத்தை தமிழகம் ஆளும், ஸ்டாலின் ஆள்வார். கூட்டணி கட்சிகள் துணை நிற்போம். இல்லையென்றால் தமிழகத்தை பாஜக தான் ஆளும். அதிமுகவால் ஆள முடியாது.

தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக நிற்கவில்லை 234 தொகுதிகளில் பாஜக தான் நிற்கிறது அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஏராளமான காரணங்கள் உள்ளன. அதிமுகவால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியவில்லை. நீட் தேர்வாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் இயற்கை பேரிடர்களின் போதும் சரி  மத்திய அரசிடம் இருந்து எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை. மொழி பிரச்சனை இருக்கிறது. மத்திய அரசாங்கம் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்பதில் தெளிவாக இருக்கிறது.

 சமஸ்கிருதத்திற்கு அவர்கள் ஒதுக்கி இருக்கும் தொகை சுமார் 300 கோடி ரூபாய். ஆனால் அவர்கள் தமிழுக்கு ஒதுக்கி உள்ள தொகை மிக மிக குறைவு. இதனை ஆளும் கட்சியாக உள்ள அதிமுக தான் தட்டி கேட்க வேண்டும். ஆனால் கேட்கிற துணிவு அவர்களிடம் இல்லை. காரணம் அவர்கள் மீது பல்வேறு விசாரணைகள் உள்ளன. இந்த விசாரணைகளுக்கு அஞ்சி அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதே கிடையாது. மேலும் கட்டுப்பள்ளி துறைமுகத்தை மேம்படுத்த பலநூறு கிராமங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பன்முகத் தன்மையை அகற்ற பாஜக முயற்சிக்கிறது. அதிமுக அதற்கு துணை போகிறது. தொழிலதிபர் அதானியும் தமிழக அரசை கட்டுப்படுத்தி கொண்டு இருக்கிறது, என்றார்.


Tags : Tamil Nadu ,Delhi ,KS Alagiri Thadaladi , கே.எஸ்.அழகிரி
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...