×

சொன்னாரே செஞ்சாரா?.... வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு ஏமாற்றம் தந்த எம்எல்ஏ: மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியானது தேர்தல் வரலாற்றில் கின்னஸ் சாதனையை படைத்த தொகுதியாகும். கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது மொடக்குறிச்சி தொகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் சீர்திருத்தம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1033 வேட்பாளர்கள் களம் இறக்கி தேர்தல் ஆணையத்தை கிடுகிடுக்க வைத்த தொகுதியாகும். அவல்பூந்துறை, மொடக்குறிச்சி, பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி, வெள்ளோட்டம்பரப்பு, சிவகிரி, கொள்ளங்கோவில், ஊஞ்சலூர், வெங்கம்பூர், கொடுமுடி, சென்னசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளும் 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் கொண்ட தொகுதியாகும்.

கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய 2 தாலூகா இத்தொகுதியில் அடங்கி உள்ளது. இத்தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக நேரடியாக களம் கண்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிவசுப்பிரமணி 2,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதியில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களே அதிகம். காலிங்கராயன், கீழ்பவானி கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் இத்தொகுதியில், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, நீர் மேலாண்மை, கழிவு நீர் பிரச்சனை உள்ளிட்டவை முக்கிய பிரச்னையாக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் சாய தோல் ஆலை கழிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது இந்த தொகுதிதான்.

தொகுதியில் மொடக்குறிச்சி, கொடுமுடி என இரு வட்டங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். மொடக்குறிச்சி புதிய தாலுகா உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் பஸ் ஸ்டாண்டு கூட இல்லாதது பெரும் குறையாக உள்ளது. கொடுமுடியில் பஸ் ஸ்டாண்டு உள்ளது. ஆனால் அங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. கொடுமுடி ஒன்றியம் சிவகிரியில் செயல்பட்டு வந்த அரசு கலை அறிவியல் கல்லூரியை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்தது, பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வருவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாதது உள்ளிட்டவைகள் மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் எம்எல்ஏ சிவசுப்பிரமணியின் ஆதரவாளர்கள் தொகுதியில் உள்ள ஏரி, குளங்களில் மண்ணை வெட்டி எடுத்தது, பினாமி பெயர்களில் டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொள்வது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிப்பது போன்றவை சிவசுப்பிரமணி எம்எல்ஏ மீது பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆகும். தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியதைவிட தன்னுடைய வளத்தை பெருக்குவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியதின் விளைவு எம்எல்ஏ சிவசுப்பிரமணியத்தின் சொத்து மதிப்பானது பல மடங்கு அதிகரித்துள்ளதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர். சமவெளிப் பகுதிகளையும் தாண்டி மலைப்பகுதிகளில் நிலம், கெஸ்ட்ஹவுஸ் உள்ளிட்டவைகளை வாங்கி குவித்துள்ளதாகவும் தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

‘‘ரூ.476 கோடியில் குடிநீர் திட்டங்கள்’’
மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்பிரமணி கூறும்போது, ‘‘நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.137 கோடி செலவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.476 கோடி செலவில் காவிரி குடிநீர் திட்டம், சிவகிரி பேரூராட்சியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், ரூ.31 கோடி மதிப்பில் மஞ்சள் ஆராய்ச்சி மையம், ரூ.76 கோடி செலவில் காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் என மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் கொடுமுடி, முத்துக்கவுண்டன்பாளையத்தில் 325 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. லக்காபுரத்தில் 450 வீடுகள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படுகின்றது. இதுபோல 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்’’ என்றார்.

* ‘‘ஒருநாள் கூட எம்எல்ஏ அலுவலகம் திறந்ததில்லை’’
மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் கூறும்போது, ‘‘மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்பிரமணி கடந்த 5 ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும்படி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மொடக்குறிச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவில்லை. அரச்சலூர், மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பஸ் ஸ்டாண்டு அமைக்கப்படவில்லை. பாசூரில் ரயில்வே பாலம் அமைக்கப்படவில்லை. 46 புதூரில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டு பயனற்று கிடக்கிறது. 10 ஆண்டுகளாக மொடக்குறிச்சி சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படவே இல்லை. இதனால் மொடக்குறிச்சி எம்எல்ஏவை மக்கள் சந்திக்க முடியாமல் உள்ளனர். பல்வேறு திட்டங்கள் அறிவிப்போடு நிறுத்தப்பட்டுவிட்டது’’ என்றார்.

Tags : MLA ,Modakkurichi ,VP ,Sivasubramanian , Did you say Senchara? .... MLA who disappointed the people by not fulfilling his promises: Modakkurichi MLA VP Sivasubramanian
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...