41 நாட்களுக்குப்பின் சென்னையை விட்டு முதல் பயணம் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா திடீர் தஞ்சை வருகை: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டம்; முதல்வர் உத்தரவின்பேரில் உளவுத்துறை ரகசிய கண்காணிப்பு

தஞ்சை: அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி அறிக்கை வெளியிட்டு வீட்டிலேயே இருந்த சசிகலா, 41 நாட்களுக்கு பின் திடீரென தஞ்சை வந்தார். முதல்வரின் உத்தரவின் பேரில் சசிகலாவை உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி பெங்களூருவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். முன்னதாக அவர் மருத்துவமனையில் இருந்து காரில் புறப்பட்டபோது அதில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிமுவை கைப்பற்றி மீண்டும் தலைமை ஏற்க உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இந்தநிலையில், தனிமை நாட்கள் முடிந்து பிப்ரவரி 8ம்தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா 23 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்தார். வரும் வழியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை வந்த சசிகலா தி.நகரில் உள்ள வீட்டில் தங்கினார். அங்கு அவரை அதிமுக முக்கிய தலைவர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாதி கட்சியினர் மட்டும் அவரை நேரில் சந்தித்து பேசினர். அதிமுகவில் தலைமை ஏற்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதே கோரிக்கையை, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் வலியுறுத்தியது. ஆனால் சென்னை வந்த பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி தனியாக சந்தித்தபோது சசிகலாவை சேர்த்தால் வரும் தேர்தலில் தோல்வி உறுதி. அவர் இல்லாமல் நாம் தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார். இதற்கு மோடியும் பச்சைகொடி காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், அமித்ஷா மட்டும் அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்தார். இதற்கு, ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது, அமமுகவை கூட்டணியில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இதையடுத்து, அவர் அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் எனவும் திடீரென அறிக்கை வெளியிட்டார். சசிகலாவின் இந்த முடிவு அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில், 41 நாட்களுக்குபிறகு நேற்றுமுன்தினம் திடீரென சசிகலா தஞ்சை வந்தார். இரவு 10 மணி அளவில் தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள கணவர் நடராஜனின் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். நாளை (20ம்தேதி) நடராஜனின் 3ம் ஆண்டு நினைவு தினம் வர உள்ளதால் அன்று வரை 3 நாள் அவர் தஞ்சையில் தங்குவார் என கூறப்படுகிறது.

நடராஜனின் தம்பி பழனிவேலின் பேரக் குழந்தைகளுக்கு காதுகுத்து விழா நடராஜனின் சொந்த ஊரான விளார் கிராமத்தில் உள்ள வீரனார்கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டார். சசிகலா திருமணமான புதிதில் கணவருடன் குலதெய்வ கோயிலுக்கு வந்தவர் இப்போதுதான் மீண்டும் வந்துள்ளார். பின்னர் பாபநாசத்தில் சகோதரியின் வீட்டுக்கு சென்று அவரது கணவர் இறப்பு குறித்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். நாளை (20ம்தேதி) நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே நடராஜனுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லறையில் சசிகலா அஞ்சலி செலுத்துவார் என கூறப்படுகிறது.

தஞ்சாவூரில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் சசிகலா, பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யவும், பல அரசியல் பிரமுகர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளதாகவும் சசிகலாவின் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதவிர, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, சசிகலா வருகை குறித்த தகவல் கடந்த 16ம் தேதி தஞ்சைக்கு பிரசாரத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்தது.

இதனால் சங்கம் ஓட்டலில் எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினாராம். சசிகலா எதற்காக வந்துள்ளார்? அவரை பார்க்க யாரெல்லாம் வருகிறார்கள். அவர் யாரையும் சந்திக்கிறாரா என உளவுத்துறை மூலம் விசாரித்து கண்காணிக்க முதல்வர் ரகசிய உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 24 மணி நேரமும் நடராஜனின் வீட்டையும், சசிகலாவின் நடவடிக்கைகளையும் உளவுத்துறை கண்காணித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சசிகலா ஆதரவாளர்கள் பலருக்கு சீட் கொடுக்கவில்லை.

ஓபிஎஸ், இபிஎஸ் தங்களது ஆதரவாளர்களுக்கும் மட்டும் சீட் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதேபோல் அதிமுகவில் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். பல இடங்களுக்கு அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். சிலர் அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளடி வேலைகளில் இறங்கி உள்ளனர். அதேநேரத்தில் திருச்சியை சேர்ந்த அமைச்சர் உள்பட சிலர் தினகரனை ரகசியமாக சந்தித்துள்ளனர். அவர்களிடம் அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க சில ரகசிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலை விட்டு ஒதுங்கியதாக கூறிய சசிகலா தேர்தல் நேரத்தில் தஞ்சை வந்தது அதிமுக, அமமுகவினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்ட சசிகலா

கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு நேற்று காலை 11 மணிக்கு வந்த சசிகலாவுக்கு கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் விநாயகரை வழிபட்டு கோயிலுக்குள் வந்த சசிகலா, 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்துக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து மகாலிங்கசுவாமி, சுந்தரகுஜாம்பாள், மூகாம்பிகை அம்பாள்  சன்னதிக்கு சென்று வழிபட்டார். 1 மணி நேரம் சுவாமி தரிசனத்துக்குபின் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும், குடைகளையும் வழங்கினார்.

Related Stories: