×

நாகையில் துறைமுகம் அமைய சாத்தியக்கூறுகள் இல்லை: அதிமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதி அம்பலம்.!!!

நாகை: சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது நாகப்பட்டினம். அலங்காரப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை தென் இந்தியாவிலிருந்து அயல்நாடுகளுக்கு  அனுப்பும் முக்கிய ஏற்றுமதித் தளமாகவும், முக்கிய இறக்குமதி தளமாகவும் நாகை துறைமுகம் விளங்கியது. பன்னாட்டு சரக்கு போக்குவரத்துடன் பயணிகள் கப்பல் போக்குவரத்திலும் நாகை துறைமுகம் கோலோச்சியது என்று கூறலாம்.  இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றிருந்தது.

முந்தைய காலங்களில் பரபரப்பாக இயங்கிய நாகை துறைமுகம் கடந்த 1980ம் ஆண்டுக்குப் பின் தன் செல்வாக்கைப் படிப்படியாக இழந்தது. ரோனா, ரஜூலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ஆகிய கப்பல்களின் நாகை வருகை படிப்படியாக குறைந்தது.  பின்னர் அந்தக் கப்பல்கள் தங்கள் வருகையை முழுமையாக நிறுத்திக் கொண்டன. எம்.வி.சிதம்பரம் கப்பல் மட்டும் நாகைக்கு வந்து சென்றது. 1984ம் ஆண்டில் மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த எம்.வி.சிதம்பரம் கப்பலில்  தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கப்பலும் நாகை சேவையை நிறுத்திக் கொண்டது. பின்னர் வெங்காய ஏற்றுமதியை மையமாகக் கொண்டு நாகை துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல் போக்குவரத்துத் தொடர்ந்து வந்தது. பினாங்கு  மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு வெங்காய ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்று வந்தது.

1991-ம் ஆண்டில் போர்ட்கிளாங் துறைமுகம் கண்டெய்னர் துறைமுகமாக மாற்றப்பட்டு மலேசியாவின் பிரதான துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது. அப்போது, நாகை துறைமுகத்தில் கண்டெய்னர் கையாளும் வசதி இல்லாத காரணத்தால்  வெங்காய ஏற்றுமதியும் தடைபட்டது. 1991ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி நாகையிலிருந்து எம்.வி.டைபா என்ற கப்பல் மூலம் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதே நாகை துறைமுகத்திலிருந்து நடைபெற்ற கடைசி ஏற்றுமதியாகும்.  போதுமான வளர்ச்சி நடவடிக்கைகள் இல்லாததாலும் நாகைக்கு அருகே காரைக்கால் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதாலும், நாகை துறைமுகம் தனது விறுவிறுப்பான செயல்பாடுகளை இழக்க  தொடங்கியது.

தற்போது இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயில் மட்டுமே இத்துறைமுகத்தை இயங்கச் செய்து வருகிறது. இதுவும் கடந்த சில மாத காலமாக தடைபட்டுள்ளது. நாகை துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை  கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டில்  தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசும்போது, ரூ.380 கோடியில் அனைத்து பருவ  நிலைகளிலும் இயங்கக் கூடிய பசுமை சூழ் துறைமுகமாக நாகை துறைமுகம் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். இதுவரை அந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறவில்லை.

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நாகை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மீண்டும் நாகைக்கு துறைமுகம் வர வாய்ப்புள்ளதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  ஆசைப்படி நாகையில் பசுமை துறைமுகம் அமைய தனியார்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தனியார் ஒப்பந்தம் எடுக்க விரும்பினால் நாகையில் துறைமுகம் அமையும் என்று பதில் கூறினார். தனியார் ஒப்பந்தம் எடுத்து துறைமுகம்  அமையும் என நினைத்த டெல்டா பகுதி மக்களுக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் அரவிந்த்குமார் தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கு தகவல் உரிமை பெறும் சட்டத்தின்படி நாகையில் துறைமுகம் அமைய வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்த  சில தகவல்களை கேட்டார். அப்போது தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் இருந்து கடிதம் வந்தது. இதில் துறைமுக மேம்பாடு தொடர்பாக திட்ட சாத்தியக் கூறினை வெளிப்படுத்தும் வகையில் தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு  அறிக்கையினை தற்போதைய கால நிலைக்கு ஏற்ப சமர்பிக்க தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆலோசகரிடம் கோரப்பட்டது.

போதிய கட்டமைப்பு மற்றும் இடவசதி நாகை துறைமுகம் அருகில் இல்லாததால் துறைமுகம் அமைய சாத்தியக்கூறுகள் இல்லை என கருதி ஆலோசகர் எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. தமிழ்நாடு சிறு துறைமுக மேம்பாட்டு  கொள்கையில் தனியார் முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் மேம்படுத்தப்படும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் இருந்து இது போல் கடிதம் வந்துள்ளது டெல்டா பகுதி மக்களிடம் மீண்டும்  ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தற்போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பன்னாட்டு கடல் வாணிபத்தில் கோலோச்சி இருந்த சோழநாட்டு துறைமுகமான நாகப்பட்டினத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டிற்கு பயணிகள் மற்றும்  சரக்கு கப்பல் இயங்கி வந்தது. 1984ம் ஆண்டுக்கு பிறகு பயணிகள் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் அத்துறைமுகத்தை மேம்படுத்தி, கப்பல் போக்குவரத்து தொடங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறி உள்ளது. ஆனால்  துறைமுகம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது, அதிமுகவின் பொய்யான வாக்குறுதியை அம்பலப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில்  நாங்கள் தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Naikah , No possibility of a port in Nagaland: AIADMK's false election promise exposed !!!
× RELATED சுருக்குமடி, இரட்டைமடி வலைக்கு எதிராக...