×

சுருக்குமடி, இரட்டைமடி வலைக்கு எதிராக நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மீனவர்கள் ஸ்டிரைக்: ரூ4.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

நாகை: தமிழகத்தில் சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை, ஸ்பீடு இன்ஜின் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள சில மீனவர்கள் சுருக்குமடி வலை, இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டுமென போராடி வருகின்றனர். அரசு தரப்பில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டுமென சில மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி நாகை, மயிலாடுதுறை, காரைக்காலில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதாக தகவல் வந்தது. இதனால் அந்த மீனவர்கள் செல்லும் படகுகளை கடலில் தடுத்து நிறுத்துவதற்காக நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் புறப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகை துறைமுகத்துக்கு போலீசார் மற்றும் மீன்துறை அதிகாரிகள் வந்து அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் பார்த்து கொள்வதாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து நாகை துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த 14ம் தேதி நடந்தது. இதில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வரும் 20ம் தேதி வரை தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது. வரும் 20ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஒன்றாக இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 14ம் தேதி மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் துவங்கியது. இதில் 3 மாவட்டங்களில் இருந்து 2,500 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகளில் கடலுக்கு செல்லும் 1.50 லட்சம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று 3வது நாளாகவும் தொடர்ந்தது. இதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், தங்களது படகுகளை கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்களின்  போராட்டத்தால் தினமும் ரூ.1.50 கோடி  என கடந்த 3 நாட்களில் ரூ.4.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Naikah ,Peacal Fishermen ,Stirke , Nagai, Mayiladuthurai, Karaikal fishermen strike against short, double net: Rs 4.50 crore trade impact
× RELATED போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்...