தூத்துக்குடியில் அதிகாலை பயங்கரம் `பிரியாணி மாஸ்டர்’ அடித்து கொலை: மதுபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்

தூ்த்துக்குடி: தூத்துக்குடியில்  இன்று அதிகாலை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரியாணி மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். இததொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி டூவிபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (48). பிரியாணி மாஸ்டர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள் உள்ளனர்.  மாரியப்பனின் நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (48), ஆழ்வார்திருநகரி கணேசன்(35). மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மரம் வெட்டுதல் மற்றும் சமையல் வேலைக்கு ஒன்றாக சென்று வருவது வழக்கம்.

இதேபோல் மாரியப்பன், தினமும் இரவு டூவிபுரம் பகுதியில் உள்ள சமையல் பாத்திரம் வாடகை நிலையம் அருகே டிரை சைக்கிளில் சென்று தூங்குவது வழக்கம்.  இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அவர், டூவிபுரம் பகுதியில் டிரை சைக்கிளில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேஷ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர்  வின்சென்ட்  அன்பரசி, எஸ்.ஐ. முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரியப்பன் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியில் பதுங்கி இருந்த அவரது நண்பர்கள் வேலுச்சாமி மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மதுபோதையில் மாரியப்பனை அவரது நண்பர்கள் இருவரும் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலையான மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் வேலுச்சாமி, கணேசன் ஆகியோர் நேற்றிரவு வேலை முடிந்து ஒன்றாக மது அருந்தினர்.  அப்போது போதையில் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறந்த மாரியப்பன், வேலுச்சாமியை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி, கணேசன் ஆகியோர் மாரியப்பனை விறகு கட்டை மற்றும் கல்லால் தாக்கி  கொலை செய்துள்ளனர். போதையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். கைதான கணேசனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 3 குழந்தையும், 2வது மனைவிக்கு ஒரு குழந்தை உள்ளது. மதுபோதையில் பிரியாணி மாஸ்டர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>