×

'ரோபோ'சின்னத்தை மக்களிடம் எடுத்துச்செல்ல முடியவில்லை!: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அர்ஜுன மூர்த்தி கட்சி போட்டியிடவில்லை என அறிவிப்பு..!!

சென்னை: ரஜினியின் நண்பர் அர்ஜுன மூர்த்தியின் கட்சி இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  குறுகிய காலத்தில் முழுமையான களப்பணியாற்ற முடியாததால் தேர்தலில் போட்டியிடவில்லை என அர்ஜுன மூர்த்தி அறிவித்துள்ளார். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை தொடங்கிய அர்ஜுன மூர்த்தி தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பில், காலத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம். எங்கள் சத்தியம், சமத்துவம் மற்றும் சமர்ப்பணம் என்ற கொள்கைகள் தான் எமது பணிகளுக்கும், செயல்முறைகளுக்கும் வழிகாட்டுகின்றன.

அனைத்து தொகுதிகளுக்கும் அலைமோதும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிலிருந்து வேட்பாளர்களை தரமறிந்து தேர்வு செய்தல், தேவையான மற்ற வளங்கள் சேகரிப்பு மற்றும் சீரிய நிர்வாகம், அனைத்துத் தொகுதிகளிலும் ரோபோட் சின்னத்திற்கான தொழில்நுட்ப வரிசைப்படுத்துதல், எடுத்து செல்வது, மாநிலம் முழுவதும் திட்டமிட்டபடி விரிவான களப்பிரச்சாரம் செய்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் இந்த குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் கையாளுவதற்கு தமக்கு இடம் தரவில்லை என்பதே உண்மை. இந்த சூழ்நிலையில், ஏப்ரல் 6, 2021ம் தேதி நடைபெறவிருக்கும் தற்போதைய தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி முடிவு செய்துள்ளோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் எங்கள் கொள்கையின் அடிப்படையில் களபலத்தை வளர்த்துக் கொள்வோம் என்று ரஜினி தொடங்காத அரசியல் கட்சியின் பொறுப்பாளராக இருந்து கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி அறிவித்துள்ளார். புதிய கட்சி தொடங்கி அரசியலில் போட்டியிடவில்லை என ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். ரஜினியை தொடர்ந்து தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கமும் போட்டியிடவில்லை என அறிவித்தது. தமிழருவி மணியனை அடுத்து ரஜினியின் ஆதரவாளரான அர்ஜுன மூர்த்தி கட்சியும் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Arjuna Moorthy ,Tamil Nadu Assembly , Robo, Tamil Nadu Legislative Assembly election, Arjuna Murthy Party, did not contest
× RELATED ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக...