×

தமிழக சட்டப்பேரவை தேர்தல்.. திமுக தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்கும் : ABP-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்!!

சென்னை : தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ABP-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக ABP-சி வோட்டர் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் கூட்டணி 43% வாக்குகளை பெற்று 161 முதல் 169 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி 53 முதல் 61 இடங்களை கைப்பற்றும் என்று ABP-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு 2 முதல் 6 இடங்களும் அமமுக கூட்டணிக்கு 1 முதல் 5 இடங்களும் இதர கட்சிகளுக்கு 3 முதல் 7 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு 7% வாக்குகளும் அமமுக கூட்டணிக்கு 6.4% வாக்குகளும் கிடைக்கும் என்று ABP-சி வோட்டர் தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க வேண்டும் என்று 40% வாக்காளர்கள் விரும்புவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 29.7% வாக்காளர்கள் பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகம் உள்ள பிரச்சனைகள் குறித்து வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி, வேலையில்லா திண்டாட்டம் அதிகம் இருப்பதாக 32.8% பேர் கவலை தெரிவித்துள்ளனர். மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சனை பற்றி 11.6% பேர் கவலை தெரிவித்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை பற்றி 10.4% பேர் கவலை தெரிவித்துள்ளனர்.


Tags : Tamil Nadu Legislative Election ,ABP-C Water , ABP-C Voter, Legislature, Election, DMK
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தல்...