ஆன்டிகுவா: இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. நார்த் சவுண்ட், விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. குணதிலகா 36, கருணரத்னே 31, பதும் நிசங்கா 24, சண்டிமால் 16, தசுன் ஷனகா 22, திசாரா பெரேரா 3 ரன்னில் வெளியேறினர். பண்டாரா 55 ரன் (74 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), வனிந்து டி சில்வா 80 ரன்னுடன் (60 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அகீல் உசேன் 3, ஜோசப், முகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன் குவித்து ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. ஷாய் ஹோப் 64 ரன் (72 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), டேரன் பிராவோ 102 ரன் (132 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். கேப்டன் போலார்டு 53 ரன் (42 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜேசன் ஹோல்டர் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டேரன் பிராவோ ஆட்ட நாயகன் விருதும், ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் மார்ச் 21ம் தேதியும், 2வது டெஸ்ட் மார்ச் 29ம் தேதியும் தொடங்குகின்றன.