×

சென்னையில் ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதி வேளச்சேரி பிரபலங்கள் முட்டி மோதுவதால் முடிவெடுக்க திணறும் காங்கிரஸ்: மேலிட பொறுப்பாளரும் சீட் கேட்பதால் பரபரப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டது. இறுதியாக ஈவிகேஸ் இளங்கோவன்,  திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் தங்கள் வாரிசுகளுக்கும், மாணிக்கம் தாகூர் தனது மாமனாருக்கும், கே.எஸ்.அழகிரி, செல்லக்குமார் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுக்கும் இடங்களை பெற்றுவிட்டதால் 21 தொகுதிகளின்  வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து அறிவித்து விட்டனர்.  இன்னும் வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு, குளச்சல் ஆகிய 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் கடுமையான இழுபறி ஏற்பட்டுள்ளது. வேட்பு  மனு தாக்கல் முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், சென்னையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான வேளச்சேரியை முக்கிய பிரபலங்கள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதால் கடும் போட்டி எழுந்துள்ளது.
 தங்கபாலு அவரது மகன் கார்த்திக்கும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஆரூண் மற்றும் சென்னை மாவட்ட தலைவர்கள், துணை தலைவர் தாமோதரன், நாசே ராஜேஷ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கேட்டும் வருகின்றனர்.

 இந்த வரிசையில் மேலிட பொறுப்பாளராக இருக்கும் தினேஷ் குண்டுராவும் கோட்டா அடிப்படையில் தனக்கு ஒரு சீட் வேண்டும் என்று கேட்டுள்ளது தமிழக காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். கோஷ்டி தலைவர்கள்  தங்களுக்கான கோட்டா அடிப்படையில் பிரித்து கொள்வது வழக்கம். இவர் தனக்கு ஒரு சீட் என்று போர்கொடி தூக்கியிருக்கிறாம்.  அதாவது வேளச்சேரி தொகுதிக்கு, தேசிய செயலாளராக இருக்கு சி.டி.மெய்யப்பனுக்கு வாய்ப்பு வழங்க  வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாம்.  ஏற்கனவே கோஷ்டி பிரச்னையில் 4 தொகுதிக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாமல் கட்சி தலைமை தவித்து வரும் நிலையில் இவரது சிபாரிசு கட்சியில் மத்தியில் கடும்  அதிருப்தியை ஏற்படுதியுள்ளதாக கூறப்படுகிறது.  

குளச்சல் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவான பிரின்ஸ்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கக்கூடாது.  கட்சிக்காக உழைத்த பலர் உள்ளனர். அவர்களில் தகுதியுள்ள ஒருவரை தேர்வு செய்து வாய்ப்பளிக்க  வேண்டும் என்பதால் அங்கும் இழுபறி நீடிக்கிறது. மயிலாடுதுறை தொகுதிக்கு கோஷ்டி தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருவதால் இன்றும் வேட்பாளரை முடிவு செய்ய  முடியாமல் கட்சி தலைமை தவித்து வருகிறது. இருந்தாலும் இன்று மாலைக்குள் வேட்பாளர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார்கள் என மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான  வேளச்சேரியை முக்கிய பிரபலங்கள் கேட்டு நெருக்கடி கொடுப்பதால் கடும் போட்டி எழுந்துள்ளது.

Tags : Chennai ,Velachery , The only constituency allotted in Chennai is Velachery Celebrities.
× RELATED சென்னை ஆலந்தூரில் வளர்ப்பு நாய்...