×

சட்டப்பேரவை தேர்தல் களம் விறுவிறுப்பு மு.க.ஸ்டாலின், எடப்பாடி மனு தாக்கல்: உதயநிதி ஸ்டாலின், கமல், டிடிவி, சீமான், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களும் தாக்கல் செய்தனர்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி  ஸ்டாலின், கமல், டிடிவி தினகரன், சீமான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேற்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் மனுதாக்கல் செய்யும் பகுதிகளில் பல கட்சிகளின் தொண்டர்களும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினர். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில்  தயாராகி வருகின்றன.

திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலைக் கட்சி ஒரு தொகுதி என உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தத்தில் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சனிக்கிழமை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக 177 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதேபோல் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் இன்னும் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு விடுமுறை. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் நேற்று மீண்டும் தொடங்கியது. 2வது நாளான நேற்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டே தொடங்கி விட்டார். ‘ஒன்றிணைவோம் வா..’, ‘மக்கள் கிராம சபை கூட்டம்’, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தர போராரு’, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று விதவிதமான தலைப்புகளில் அவரது பிரசார பயண திட்டம் அமைந்தது. இந்நிலையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்கள் குறைகேட்பு பிரசார பயணத்தை மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சூறாவளி பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கினார். கலைஞர் கருணாநிதி பிறந்த மண்ணான திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்பாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின், நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் ஆணையம் அறிவித்த தேர்தல் முறைகளை சரியாக கடைப்பிடித்து மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, என்.ஆர்.இளங்கோ எம்பி ஆகியோர் மட்டும் உடன் இருந்தனர். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், தொண்டர்கள் புடைசூழ அயனாவரத்தில் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்றார். வழிநெடுக மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் திறந்த ஜீப்பில் மு.க.ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று கலைஞரின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். மேலும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். அதேபோன்று, சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டி.மோகன்ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் மதியம் 1 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் பிற்பகல் 1.30 மணியளவில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் 12 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்த இடம், தங்கி இருந்த ஓட்டலுக்கு அருகிலேயே இருந்ததால் கமல் ஓட்டலில் இருந்து கட்சியினருடன் நடந்தே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் உள்ளிட்ட பெரும்பாலான அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களும் நேற்று மனு தாக்கல் செய்தனர். அனைத்து கட்சியினரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் செய்த இடம் களை கட்டி காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் வேட்புமனு தாக்கல் நடைபெற்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வருகிற 19ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்தை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார். அதே போல முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஈடுபட்டார். மேலும் அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று நல்ல நாள் என்பதால் தமிழகம் முழுவதும் முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததால், மனு தாக்கல் செய்யும் இடங்களில் பரபரப்பு நிலவியது.

* ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்கள் குறைகேட்பு பிரசார பயணத்தை  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார் ஸ்டாலின்.
* சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து, 3வது முறையாக களம் இறங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
* கலைஞர் பிறந்த மண்ணான திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை ஸ்டாலின் நேற்று தொடங்கினார்.
* முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags : MK Stalin ,Edappadi ,Udayanithi Stalin ,Kamal ,DTV ,Seeman , MK Stalin, Edappadi petition filed by Udayanithi Stalin, Kamal, DTV, Seeman, ministers and other important personalities.
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்