×

கொரோனா தொற்று மீண்டும் பரவல்: நாக்பூரில் ஒரு வாரம் ஊரடங்கு அமல்...மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்

நாக்பூர்: கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு நாக்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், நேற்றிரவு வரை மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி மாநில அரசு நிர்வாகம் மக்களை வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் பரவலும் அதிகரித்து வருகிறது. அதனால், அவுரங்காபாத் மாவட்டத்தில் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதேபோன்று, நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  இதனை முன்னிட்டு மக்கள் மதுபான கடைகளில் நேற்று குவிந்தனர்.  அவர்கள்  கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, வரிசையில் நிற்காமல் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு சென்று மதுபானம் வாங்க முற்பட்டனர்.  காட்டன் மார்க்கெட் பகுதியிலும் நூற்றுக்கணக்கான மக்கள்  மது விற்பனை செய்யும் கடைகளின் முன் குவிந்தனர்.

ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பழம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பால் பூத் உள்ளிட்டவை திறந்திருக்கும்.  மருந்து பொருட்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு அமலான நிலையில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன.  வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றை மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பொதுமக்களும் வீடுகளை விட்டு அத்தியாவசிய தேவைகளன்றி வெளியே வராமல் கூடியவரை தவிர்த்தனர். வாகன போக்குவரத்தும் முடங்கியது.  இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால், மற்ற மாநிலங்களிலும் இதே நடைமுறை நடைமுறைக்கு வருமோ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


Tags : Nagpur Amal , Corona infection re-emerges: A week-long curfew in Nagpur ...
× RELATED தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு...