×

ரூ.50 கோடி நிதி காணாம போச்சு சிறுவாணி அணை தூர் வாராம விட்டாச்சு...!-39 ஆண்டு எதிர்பார்ப்பு வீணாச்சு

கோவை : சிறுவாணி அணை சீரமைப்பு திட்டம் அறிவித்து 3 ஆண்டாகியும் 50 கோடி ரூபாய் நிதியின்றி நிறைவேறாமல் நிறுத்தப்பட்டது.  
கோவை கேரள எல்லையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. சிறுவாணி அணை திட்டம் 1931ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அப்போது, 44 லட்சம் ரூபாய் செலவில் சிறு குட்டை போல் நீர் தேக்கம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது.

1949ம் ஆண்டில், 450 மி.மீ விட்டம் கொண்ட இரும்பு குழாய் பதிக்கப்பட்டு காட்டு வழியாக குடிநீர் பெறப்பட்டது. 1954ம் ஆண்டில் சிறுவாணி நீர் தேக்க பரப்பு மேலும் விரிவானது. மாநில சீரமைப்புக்கு பின்னர் சிறுவாணி நீர் ஆதாரம் கேரள மாநிலத்திற்கு சொந்தமாகி விட்டது.
இந்நிலையில், தமிழக கேரளத்திற்கு இடையே தினமும் 101.4 மில்லியன் லிட்டர் (10.1 கோடி லிட்டர்) குடிநீர் பெறும் வகையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கடந்த 26-04-1966ம் தேதி முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 1973ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

99 ஆண்டுகள், சிறுவாணி குடிநீரை தமிழக மக்கள் பயன்படுத்தலாம், தேவைப்பட்டால் ஒப்பந்த காலத்தை நீடிக்கலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 21-08-1976ம் தேதி தமிழக அரசு 16.16 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டும் பணியை துவக்கியது. கடந்த 1982ம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்டது. சிறுவாணி அணையின் நீர் தேக்க பரப்பு 22.6 சதுர கி.மீ. அணைக்கு முக்தியாறு, பட்டியாறு உள்ளிட்ட 37 ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

அணையில் 1.6 மீட்டருக்கு சேறு, சகதி (ஷில்ட்) இருப்பதாக தெரியவந்தது. அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 15 மீட்டர். நிலமட்டத்திற்கு கீழ் 3.2 மீட்டர் வரை பழங்கால தடுப்பணை உள்ளது. இதில், பெரும்பகுதி சேறு, சகதி மூடி கிடப்பதால் வறட்சி காலத்தில் குடிநீர் பெற முடிவதில்லை. அணையை தூர்வாரி சீரமைத்தால் குடிநீர் கூடுதலாக 100 நாட்களுக்கு பெற முடியும். மேலும், நீர் உறிஞ்சு நிலையத்தில் வால்வு பாதிப்பை தவிர்க்க முடியும். அணையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு நீர் தேக்க பரப்பு குறைந்து விட்டது. தூர்வாரி சீரமைத்தால், நீர் தேக்க பரப்பு கூடும். கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

குடிநீர் சேறு, சகதியாக சப்ளையாவதை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் போது சிறுவாணி அணை தூர்வாரும் திட்டம் 50 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 3 ஆண்டாகியும் இந்த திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. அணையை பராமரிக்கும் கேரள அரசு, தூர் வார ஒப்புதல் வழங்கியும், தமிழக அரசு முன் வரவில்லை.

39 ஆண்டாகியும் அணை தூர் வாராமல் கிடப்பதால், வருங்காலத்தில் நீர் தேக்கம் 15 முதல் 20 சதவீதம் வரை குறையும், குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. கோவை மாவட்ட மக்களின் பிரதான குடிநீர் திட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்தியதால் கோவை வட்டார மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

குகை சேதம்:
சிறுவாணி பம்பிங் ஸ்டேஷனில் இருந்து மயிலோன் பங்களா வரையுள்ள குகை வழி நீர் பாதை (டணல்) 1.6 கி.மீ தூரம் அமைந்துள்ளது. மலையை குடைந்து அமைக்கப்பட்ட நீர் பாதையும் 39 ஆண்டிற்கு மேலாக பழுதாகி கிடக்கிறது.

இதை பராமரிக்க நிதி ஒதுக்கவில்லை. மயிலோன் பங்களாவில் இருந்து நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை 4.5 கி.மீ தூரத்திற்கு ஆனையாறு ஓடை வழியாக சிறுவாணி குடிநீர்  பாய்ந்து வருகிறது. இங்கே வனப்பகுதி குப்பைகளும், கழிவுகளும் கலப்பதாக கூறப்படுகிறது. இங்கே குழாய் பதிக்கும் திட்டமும் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இருந்து நிறைவேறவில்லை. இது கோவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தட்டி கேட்க தைரியமில்லை...!

கடந்த 10 ஆண்டாக தமிழக அரசு சிறுவாணி அணை பராமரிப்பு பணிக்கு கூட முறையாக நிதி வழங்கவில்லை. குறிப்பாக, அணையின் பக்க சுவரில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நிதி வழங்கவில்லை. பக்க சுவர் பலவீனமாக இருப்பதால் கேரள அரசு அடிக்கடி ஷட்டர் திறந்து குடிநீரை வெளியேற்றி விடுகிறது. கோவை குடிநீர் வாரியத்திற்கு தெரியாமல் பலமுறை நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், இதை தட்டி கேட்காமல் தமிழக அரசு மூடி மறைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

Tags : Pochu Siruvani Dam , Coimbatore: The Siruvani Dam Rehabilitation Project has been halted for 3 years without Rs.
× RELATED ரூ.50 கோடி நிதி காணாம போச்சு சிறுவாணி அணை தூர் வாராம விட்டாச்சு...!