×

சொன்னாரே!.. செஞ்சாரா?... 2 தடவை அமைச்சர் அந்தஸ்தில் இருந்த தொகுதியை அம்போவென விட்ட எம்எல்ஏ...: நன்னிலம் தொகுதி எம்எல்ஏ அமைச்சர் ஆர்.காமராஜ்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நன்னிலம் தொகுதி கடந்த 2006 தேர்தல் வரையில் தனி தொகுதியாக இருந்து, 2011 முதல் பொது தொகுதியாக மாற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு பணியின்போது வலங்கைமான் தொகுதி நீக்கப்பட்டு, வலங்கைமான் ஒன்றியம் நன்னிலம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. 1952 முதல் 2016 வரை நடைபெற்றுள்ள 15 தேர்தல்களில் காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகள் தலா 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் குடியரசு கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி ெபற்று நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாக ஆர்.காமராஜ் உள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் போட்டியிட்டார். வெற்றிபெற்ற ஆர்.காமராஜ் உணவுத்துறை அமைச்சரானார். இதன்மூலம் நன்னிலம் தொகுதி ெதாடர்ந்து 2வது முறையும் அமைச்சர் அந்தஸ்தில் இருந்து வருகிறது. இந்த தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்ததாக இருப்பதால் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையாக பேப்பர் தொழிற்சாலை, தவிட்டு ஆலை இருந்து வருகிறது. இதுதொடர்பாக 2 முறை சிட்டிங் அமைச்சர் காமராஜை நேரில் சந்தித்து பல தடவை கோரிக்கை மனு அளித்தோம்.

ஆனால் அந்த கோரிக்கை  நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் இருந்து வருகிறது. 10 ஆண்டாக தொகுதிக்கு தேவையான முக்கிய திட்டங்கள் நிறைவேற்றவில்லை. தொகுதிக்குட்பட்ட வலங்கைமானில் பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பேருந்திற்காக கடும் வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. வலங்கைமானில் அரைவட்ட சாலை அமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு கல்லூரி கொண்டு வராததால் மாணவர்கள் கும்பகோணம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. 10 ஆண்டாக தொடர்ந்து அமைச்சர் அந்தஸ்தில் இருந்த நன்னிலம் தொகுதியை அம்போவென எம்எல்எவும், அமைச்சருமான காமராஜ் விட்டு விட்டார் என்கின்றனர் தொகுதி மக்கள்.


‘‘10 ஆண்டுகளில் எண்ணற்ற
பணிகள் நிறைவேற்றம்’’
அமைச்சர் ஆர்.காமராஜ் கூறும்போது, வலங்கைமான் நகரில் 5.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பில் புதிய பல்வகை தொழில்நுட்ப கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. 59 ஊராட்சிகளில் ரூ.18 கோடியே 63லட்சம் மதிப்பில் நேரடி நெல்கொள்முதல் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல் ஏழை, எளிய மாணவர்களுக்காக குடவாசலில் அரசு கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. சோழ சூடாமணி ஆற்றில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.64 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. நன்னிலத்தில் ரூ.50 கோடி மதிப்பில் அரசு கல்லூரி, தொகுதி முழுவதும் 10 ஆண்டு காலத்தில் பாலங்கள், இணைப்பு சாலைகள், பள்ளி கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள், துணை மின்நிலையங்கள் என எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

‘‘கிடப்பில் கிடக்கும் பேப்பர்,
தவிட்டு தொழிற்சாலை’’
திமுக குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் கூறும்போது, நன்னிலம் தொகுதியில் வலங்கைமானில் பேருந்து நிலையம் இல்லாததால் மக்கள் தினந்தோறும் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பேப்பர் தொழிற்சாலை, தவிட்டு தொழிற்சாலை 10 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. குடவாசலில் துவங்கப்பட்ட அரசு கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படாததால் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் கடும் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை இதுவரை இருந்து வருகிறது. இதேபோன்று பேரளத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக ரயில்வே துறையானது தனது பணியினை முடித்துள்ள நிலையில் மாநில அரசானது தனது பணியினை முடிக்காததன் காரணமாக இந்த பாலமானது அந்தரத்தில் தொங்கும் பாலமாக இருந்து வருகிறது. இதுபோன்ற தேர்தல் வாக்குறுதியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது என்றார்.



Tags : Senchara , ... MLA who left the constituency 2 times the status of Minister Ambovena ...: Nannilam constituency MLA Minister R. Kamaraj
× RELATED குடிநீர் பிரச்னையால் தள்ளாடும்...